இந்திய கிரிக்கெட்டின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான எம்.எஸ். தோனி, தனது அமைதியான அணுகுமுறை மற்றும் துல்லியமான திட்டங்களால் பல போட்டிகளில் அணிக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தவர். குறிப்பாக பவுலர்களை கையாளும் விதம் அவரது கேப்டன்சியின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
தோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய அனுபவம் குறித்து வேகப்பந்து வீச்சாளர் சிமர்ஜீத் சிங் தற்போது மனம் திறந்து பேசியுள்ளார். ஒவ்வொரு மைதானம் மற்றும் பிட்சின் தன்மைக்கு ஏற்ப தெளிவான திட்டங்களை தோனி முன்வைப்பார் என்றும், அந்த திட்டத்தை செயல்படுத்தும் பவுலர் அதில் கம்ஃபர்ட்டாக இருக்கிறாரா என்பதற்கும் முக்கியத்துவம் கொடுப்பார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு பவுலருக்கு தோனி கூறும் திட்டத்தில் முழு நம்பிக்கை இல்லையென்றால், அதையே கட்டாயப்படுத்தாமல் அவருக்கு ஏற்ற மற்றொரு ஆப்ஷனை யோசிப்பார் என்றும் சிமர்ஜீத் கூறியுள்ளார். இதுவே தோனியை மற்ற கேப்டன்களிடமிருந்து தனித்துவமாக காட்டுகிறது என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து அவர் கூறும் போது “மாஹி பாய் தனது திட்டங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்வார். குறிப்பிட்ட பிட்ச் அல்லது மைதானத்தில் என்ன செய்யலாம் என்பது குறித்து அவர் எங்களிடம் கூறுவார். எப்போதும் சிறந்த ஆப்ஷனையே தருவார். அதே நேரத்தில், அந்த ஆப்ஷனில் பவுலர் கம்ஃபர்ட்டாக இருக்கிறாரா என்பதையும் உறுதி செய்வார். பவுலருக்கு அந்த திட்டம் சரியாக இல்லை என்றால், வேறு வழியை அவர் யோசிப்பார்,” என்று சிமர்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.






