சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் செயல்பாடு மற்றும் மேம்படுத்த வேண்டிய விஷயங்கள் குறித்து இந்திய கேப்டன் சுப்மன் கில் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணி நிர்ணயித்த ரன்கள் திருப்தி அளித்த போதிலும், பனிப்பொழிவுக்கு நடுவே ஓவர்கள் குறைக்கப்பட்டதும் மற்றும் கேட்ச்களை தவறவிட்டதும் போட்டியில் பின்னடைவை ஏற்படுத்தியது.
குறிப்பாக டெத் பௌலிங் செய்யும் போது ஃபீல்டிங் அமைப்பதில் தெளிவின்மை இருந்தது என்றும், உலகக் கோப்பைக்கு முன்பாக ஃபீல்டிங் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.
இதுகுறித்து சுப்மன் கில் பேசும்போது “நிறைய விஷயங்கள் சிறப்பாக நடந்தன. ஆனால் சில பகுதிகளில் மாற்றங்கள் தேவை. நாங்கள் எடுத்த ரன்கள் மகிழ்ச்சி அளித்தது. ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டில் தான் இருந்தது, ஆனால் பனிப்பொழிவு மற்றும் ஓவர்கள் குறைக்கப்பட்டதால் கடைசி நேரத்தில் ஆட்டத்தை எதிரணி பறித்துவிட்டது. குல்தீப் விக்கெட் டேக்கர் என்பதால் அவரை இறுதியில் பயன்படுத்த நினைத்தேன். தொடரில் 6 அல்லது 7 கேட்ச்களை தவறவிட்டுள்ளோம், இது உலகக் கோப்பைக்கு முன் நல்ல அறிகுறி அல்ல. ஃபீல்டிங் மிகச் சிறப்பாக இருக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “டெத் ஓவர்களில் பந்துவீசும்போது அட்டாக் செய்கிறோமா அல்லது டிஃபென்ட் செய்கிறோமா என்பதில் தெளிவில்லை. எதிரணி ஐந்து அல்லது ஆறு விக்கெட்டுகளை இழந்திருந்தால், எந்த ஃபீல்ட் அமைக்க வேண்டும் என்பதில் குழப்பம் ஏற்படுகிறது. மிடில் ஓவர்கள் போல் வீசுகிறோமா என்பதில் தெளிவில்லை. சீக்கிரமாக அவுட் ஆகும்போதெல்லாம் ஏமாற்றம் அடைவேன். இவைதான் நாங்கள் நிச்சயமாக சிறந்து விளங்க வேண்டிய சில பகுதிகள்” என்று கூறி முடித்தார்.






