இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் துணை கேப்டன் சுப்மன் கில் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் தான் எப்படி விளையாட போகிறேன்? என்பது குறித்து பேசி இருக்கிறார்.
2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் கில் நல்ல ஃபார்மில் இருந்த பொழுதும் எதிர்பார்த்த அளவுக்கு விளையாடாமல் சீக்கிரத்தில் ஆட்டம் இழந்தார். ரோஹித் சர்மாவுக்கு முன்கூட்டியே அவர் விக்கெட்டை இழந்தது இந்திய அணிக்கு அந்த போட்டியில் பெரிய பின்னடைவாக அமைந்தது.
அந்த தவறை செய்ய மாட்டேன்
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் தான் ஒரு முக்கிய தவறு செய்து விட்டதாகவும், அதை திருத்திக் கொண்டு நாளை சாம்பியன்ஸ் டிராபியில் விளையாட வேண்டும் என்றும், ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் ஐசிசி தொடரை வெல்வது சிறந்ததாக இருக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதுகுறித்து சுப்மன் கில் பேசும்பொழுது “வெளிப்படையாக உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் எனக்கு கொஞ்சம் பதற்றம் இருந்தது. நான் அதிலிருந்து சில முக்கிய விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன். அது எனது முதல் ஐசிசி இறுதிப் போட்டியாக இருந்தது. இதனால் நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். மேலும் அந்த ஆட்டத்தில் நான் ஆதிக்கம் செலுத்துவதற்காக பேட்டிங் டைமிங்கை இழந்துவிட்டேன். ஆனால் ஐசிசி நாட் அவுட் போட்டிகளில் நாம் நினைப்பதை விட நமக்கு கொஞ்சம் நேரம் கொடுத்துக் கொள்ள வேண்டும் என்று உணர்ந்து விட்டேன்”
இதுவே சிறந்த வழியாக இருக்கும்
“நாங்கள் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தோம். ஆனால் 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் வெற்றி பெற்றோம். எனவே தற்போது இந்த இறுதிப் போட்டியை விளையாடுவதற்கு எங்களுக்கு நல்ல மொமண்டம் கிடைத்திருக்கிறது. நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம். நாங்கள் இந்த தொடரை வெல்ல முடிந்தால், இந்த ஆண்டு இந்த வடிவமைப்பை முடிப்பதற்கு மிகவும் சிறந்த வழியாக இருக்கும்”
இதையும் படிங்க: இப்ப விராட் கோலி ஜாலியா ஆட காரணம்.. இந்த பையன்தானு சொன்னா நம்புவீங்களா? – அஸ்வின் பேச்சு
“இது எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு மற்றும் எந்த ஒரு ஐசிசி தொடரிலும் எங்களுக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது. ஏனென்றால் எங்களின் கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பை கொண்டு இருக்கிறார்கள். அதனால் எங்களுக்கு ஒரு பெரிய அழுத்தம் இருக்கிறது. மேலும் கடைசியாக நாங்கள் விளையாடிய இரண்டு ஐசிசி தொடர்களிலும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தோம்” என்று கூறி இருக்கிறார்.