இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸில் கேப்டன் சுப்மன் கில் 269 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 161 ரன்களும் எடுத்திருந்தார். இதன் மூலம் ஒரே டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையும், உலக அளவில் இரண்டாவது இடத்தையும் கில் பிடித்திருக்கின்றார்.
அதுமட்டுமில்லாமல் இங்கிலாந்து தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மூன்று சதம் அடித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி, கில்லின் பேட்டிங்கில் சிறு தவறு கூட இல்லை என்று பாராட்டியுள்ளார்.
சிறந்த இன்னிங்ஸ்:
இது குறித்து பேசிய அவர், ஏதோ ஒரு கனவு போல் கில்லின் பேட்டிங் இருந்தது. என்னுடைய சமூக வலைத்தள பதிவை பார்த்தாலே உங்களுக்கு புரியும். ஏனென்றால் நான் மூன்று தலைமுறைகளாக இங்கிலாந்தில் கிரிக்கெட் பார்த்து வருகின்றேன்.
அதில், நான் பார்த்ததில் சிறந்த ஒரு பேட்டிங் என்றால் அது கில்லுடையது தான் சிறு தவறு கூட இல்லை அவருடைய பேட்டிங்கை பார்க்கும்போது இங்கிலாந்து வீரர்களால் விக்கெட்டை வீழ்த்தவே முடியவில்லை. அவருடைய பேட்டிங்கை பார்த்தால் நான் சொல்வது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியும். ஒரு தவறு கூட அவர் செய்யவில்லை.
கில்லுக்கு ரன் பசி இருக்கு:
அவர்கள் விளையாடும் விதத்தை பார்க்கும் போது கண்களுக்கு விருந்தாக இருந்தது. ரன்கள் அடிக்க வேண்டும் என்ற பசி அவரிடம் இருந்தது. அதே சமயம் பொறுமையும் நன்றாக கடைப்பிடித்தார். அவருடைய ஆட்டத்தை பார்க்கும் போது எப்படி அவருடைய டெஸ்ட் சராசரி 50 கீழே இருக்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது.
இதையும் படிங்க: லாராவின் 400 ரன்கள் சாதனை.. முறியடிக்க வாய்ப்பிருந்தும் டிக்ளேர் செய்த தென்னாப்பிரிக்க வீரர்.. ஜிம்பாப்வேக்கு எதிராக சாதனை
இந்த தொடரில் கில் பெரிசாக சாதிக்க வேண்டும் என்று நினைக்கின்றார். அது அவருடைய பேட்டிங்கில் தெரிகிறது. ஒரு சதம் அடித்தால் போதாது. இரட்டை சதம் அதற்கு மேலும் அடிக்க வேண்டும் என்று கில் நினைப்பதை பார்க்க பிரமாதமாக இருக்கின்றது. இந்தத் தொடர் கில்லை ஒரு சிறந்த கேப்டனாக உருவாக்கும் என்று நினைக்கின்றேன் என்று கங்குலி தெரிவித்துள்ளார். இதனிடையே, இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை ஜூலை 10ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது.






