நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடிய கேப்டன் சுப்மன் கில் பேட்டிங் குறித்து இந்திய முன்னாள் வீரர்கள் அஜய் ஜடேஜா மற்றும் அஜிங்க்யா ரஹானே பாராட்டி பேசியிருக்கிறார்கள்.
வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் இந்தியா முன்னிலை பெற்ற நிலையில், கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் உடன் இணைந்து சுப்மன் கில் முக்கியமான பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் ஆடிய ஆட்டம் குறித்து அஜய் ஜடேஜா பேசும்போது, “அவர் கேப்டன் கடமையைச் செய்தார். செஞ்சுரியை தவறவிட்டதற்காக அவர் நிச்சயம் வருத்தப்படுவார், ஆனால் இது அவரது நேச்சுரல் கேம் அல்ல. இந்த இந்திய அணியில் அவர் மிகவும் அதிரடியாக ஆடுபவர் அல்ல, ஆனால் மிகவும் அதிரடியான இன்னிங்ஸை ஆடினார். வெற்றிக்குத் தேவையான வேகத்தைக் கொடுத்தார். மற்றவர்களை விட வேகமாக ஆடி கூடுதல் உழைப்பைத் தருவதாகச் சொன்னார். யாரையோ அறைந்தது போல ஒரு புல் ஷாட் ஆடினார். கேஎல் ராகுலும் தேவதத் படிக்கலும் ஆட்டத்தின் வேகத்தில் ஆடினார்கள், ஆனால் இந்திய அணி வெற்றி பெறத் தேவையான வேகத்தில் சுப்மன் கில் ஆடினார்” என்று கூறி இருக்கிறார்.
இதே விவாதத்தில் சுப்மன் கில் குறித்து அஜிங்க்யா ரஹானே பேசும்போது, “அவரது ஒட்டுமொத்த இன்னிங்ஸ் என்னைக் கவர்ந்தது. லெக் சைடில் அதிக ரன்கள் எடுத்தார். பல நேரங்களில் நாம் பேராசைப்படுகிறோம். இரண்டு ரன்களில் செஞ்சுரியை தவறவிட்டது பற்றிப் பேசுகிறோம், ஆனால் அவரது 98 ரன்களை நாம் கொண்டாட வேண்டும். வந்து மொமண்டமை மாற்றினார். எங்களுக்கு நல்ல தளம் கிடைத்திருந்தது, அவர் வந்து கேப்டன் இன்னிங்ஸ் ஆடினார். தொடக்கத்தில் நேரமெடுத்துப் பிறகு ஆட்டத்தை முன்னெடுத்துச் செல்வார், ஆனால் இன்று அவரது இன்டென்ட் சிறப்பாக இருந்தது. கேப்டனாக அற்புதமான இன்னிங்ஸ் ஆடினார். செஞ்சுரி அடிக்கவில்லை, ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தும் 98 ரன்கள் எடுத்தார்” என்று கூறி இருக்கிறார்.