மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு ஒரே ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு அளிக்கப்படாதது குறித்தும், அணியின் பிளேயிங் லெவன் தேர்வுகள் குறித்தும் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கமளித்து பேசி இருக்கிறார்.
இந்த தொடரில் இந்திய அணியின் ஓப்பனர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகிய இருவருமே ஐந்து போட்டிகளிலும் விளையாடி மிகச் சிறந்த பார்மை வெளிப்படுத்தி வந்தனர். அபிஷேக் சர்மா 181.25 ஸ்டிரைக் ரேட்டில் 145 ரன்களும், சஞ்சு சாம்சன் 195.35 ஸ்டிரைக் ரேட்டில் 168 ரன்களும் குவித்து அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தந்தனர்.
இதனால் 15 வயதான இளம் இடதுகை பேட்டர் வைபவ் சூர்யவன்ஷிக்கு ஐந்து போட்டிகளிலுமே வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். இதுவரை 8 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 186.36 ஸ்டிரைக் ரேட்டுடன் 246 ரன்கள் குவித்துள்ள அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து ரசிகர்கள் மற்றும் வல்லுநர்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்தது.
தொடர் முடிந்த பிறகு நடைபெற்ற பிரசன்டேஷன் செரிமணியில் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு கிடைக்காதது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும்போது “நான் அவரிடம் தொடர்ந்து கூறி வருவது ஒன்றுதான், உனக்கான வாய்ப்புகள் நிச்சயமாக உன்னைத் தேடி வரும். உன்னுடைய பிராசஸ் மற்றும் மைண்ட்செட்டில் உறுதியாக இருந்து, வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதைப் பற்றி அதிகம் யோசிக்காமல் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும், சில நேரங்களில் நீ காத்திருந்துதான் ஆக வேண்டும். நமது அணியில் ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து சிறப்பாக ரன்கள் குவித்து வரும் இரண்டு அற்புத ஓப்பனர்கள் இருக்கிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.
வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்த கையோடு இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20, 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இதுகுறித்துப் பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “இது வழக்கமான ஒரு நாள்தான், தொடர்ச்சியான டிராவல்களுக்கு நாங்கள் ஏற்கனவே பழகிவிட்டோம். விரைவாக மீண்டு வந்து உடலைத் தயார்படுத்துவது எளிதல்ல என்றாலும், நாங்கள் சூழ்நிலைகளுக்கு ஏற்ப உடனடியாக அட்ஜஸ்ட் செய்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறோம்” என்று கூறி இருக்கிறார்.