பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) சீஃப் செலக்டர் பொறுப்பை ஏற்கப்போவதாக பரவி வந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பாகிஸ்தான் முன்னாள் பாஸ்ட் பவுலர் சோயப் அக்தர் தனக்கும் அந்த பதவிக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், தன் தாயார் அளித்த அறிவுரையை பின்பற்ற போவதாகவும் தெரிவித்துள்ளார்.
சமீபகாலமாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் மேனேஜ்மென்ட், கோச் மற்றும் செலக்டர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வரும் சூழலில், பிசிபி தலைவரை சோயப் அக்தர் சந்தித்து பேசியதாகவும், அவரிடம் சீஃப் செலக்டர் பொறுப்பு ஒப்படைக்கப்பட உள்ளதாகவும் வதந்திகள் வெளியாகின.
இந்நிலையில் இந்த தகவல்களை திட்டவட்டமாக மறுத்துள்ள சோயப் அக்தர், பாகிஸ்தான் கிரிக்கெட் அரசியலில் இருந்து விலகி இருக்குமாறு தனது தாயார் கூறியதை தான் உறுதியாக பின்பற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சோயப் அக்தர் பிடிவி ஸ்போர்ட்ஸ் சேனலில் பேசும்போது “அப்படி எதுவும் இல்லை, இப்போது கூறப்படும் செய்திகள் அனைத்தும் வெறும் ஊகங்கள் மட்டுமே. பாருங்கள், பாகிஸ்தான் அரசியல் மற்றும் பிசிபி பக்கம் தலை வைத்து படுக்காதே என விலகி இருக்குமாறு எனது தாயார் என்னிடம் கூறினார், நான் அந்த அறிவுரையைத்தான் பின்பற்றப் போகிறேன்” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர் “இந்த தகவல்களில் எந்த உண்மையும் இல்லை. பிசிபி-க்கு செல்லும் எண்ணம் எனக்கு சிறிதும் இல்லை. நான் எனது அறிக்கையில் உறுதியாக நிற்கிறேன். சீஃப் செலக்டர் பொறுப்பை நான் ஏற்கப் போவதாக வரும் இந்தச் செய்திகளையெல்லாம் நான் கேள்விப்படுகிறேன். இவை அனைத்தும் முற்றிலும் பொய், இதுபோன்ற செய்திகளில் எந்த உண்மையும் இல்லை. நான் பாகிஸ்தான் கிரிக்கெட் வளர்ச்சி பெற வேண்டும் என்று மட்டுமே விரும்புகிறேன்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் பேசிய அவர் “பிசிபி தலைவர் மொஹ்சின் நக்வியுடன் இது தொடர்பாக நான் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. தற்போதைக்கு நான் ஹூஸ்டனில் எனது தனிப்பட்ட பணிகளுக்காக வந்திருக்கிறேன். பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னேற வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன், ஆனால் வாரியத்தில் இணைந்து செயல்பட எனக்கு விருப்பமில்லை” என்று கூறி முடித்து இருக்கிறார்.