காயமடைந்தும் ஷாகின் ஷா அப்ரிடி அணியோடு இருப்பது ஏன்? – புதிய தகவல் வெளியானது!

0
130
Shakeen sha afridi

ஒரே ஒரு தோல்வி இந்திய கிரிக்கெட்டில் மிகப் பெரிய சலசலப்புகளையும், நெருக்கடிகளையும், மாற்றங்களையும் உண்டாக்கியிருக்கிறது. அது எந்தத் தோல்வி என்றால், கடந்த ஆண்டு பாகிஸ்தான் அணியோடு டி20 உலக கோப்பையில் இந்திய அணிக்கு கிடைத்த தோல்விதான். இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவர் பாகிஸ்தான் அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் 22 வயதான ஷாகின் ஷா அப்ரிடி!

ஷாகின் ஷா அப்ரிடி ஒரு முழுமையான வேகப்பந்து வீச்சாளராக திகழ்கிறார். அவரது இன்ஸ்விங் யார்க்கர் டெலிவரிகள் பேட்ஸ்மேன்களை பெரிதும் அச்சுறுத்துகிறது. கடந்த உலகக் கோப்பையில் இப்படியான டெலிவரிகளில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கேஎல் ராகுல் ரோகித்சர்மா இருவரையும் வெளியேற்றி இந்திய ரசிகர்களுக்கும் இந்திய அணிக்கும் பெரிய அதிர்ச்சியை அளித்தார். அடுத்து ஒரு அருமையான பவுன்சர் பந்தில் அப்போதைய இந்திய அணியின் கேப்டன் அரைசதம் அடித்து இருந்த விராட் கோலியையும் வெளியேற்றினார். இதனால் இந்திய அணி அந்த ஆடுகளத்திற்கு தேவையான ரன்களை குவிக்க முடியாமல் தோல்வியைத் தழுவியது.

- Advertisement -

தற்போது யுனைடெட் அரபு எமிரேட்டில் இந்த வார இறுதியில் ஆசிய கோப்பை துவங்க இருக்கிறது. பாகிஸ்தான் இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதிக் கொள்கின்றன. ஆனால் துரதிஷ்டவசமாக பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு துறையின் துருப்பு சீட்டான ஷாகின் ஷா அப்ரிடி காயத்தால் ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார். அவருக்குப் பதிலாக முகமது ஹஸ்னைன் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஷாகின் ஷா அப்ரிடி இதுவரை 25 டெஸ்ட் போட்டிகள் 32 ஒருநாள் போட்டிகள் 40 டி20 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். கடந்த ஆண்டு மூன்று வடிவிலான முப்பத்தி ஆறு சர்வதேச போட்டிகளில் விளையாடி எழுபத்தி எட்டு விக்கெட்டுகளை கைப்பற்றியதால் ஐசிசியால் சிறந்த வீரர் என அறிவிக்கப்பட்டார். தற்போது காயத்தால் ஆசிய கோப்பை தொடரில் இருந்து வெளியேறி இருந்தாலும் இவர் பாகிஸ்தான் அணியோடு தான் இருக்கிறார் இதற்கான காரணம் என்னவென்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் உள்ளூர் தொலைக்காட்சியில் தெரிவித்து இருக்கிறார்.

இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரி கூறும்போது ” பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் ஆஸம் ஷாகின் ஷா அப்ரிடி அணியோடு இருக்க வேண்டும் என்று விரும்பினார். அணி நிர்வாகம் அவரது காயம் மற்றும் மறுவாழ்வு உன்னிப்பாக அருகில் இருந்து கவனிக்க விரும்புகிறது. எனவே அவர் அணியோடு இருக்கிறார்” தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” சமீபத்திய ஸ்கேன் அறிக்கைகள் அவருக்கு 4 முதல் 6 வாரங்கள் ஓய்வு தேவை என்று தெளிவாகத் தெரிவிக்கின்றன. அவர் அக்டோபரில் திரும்ப சர்வதேச கிரிக்கெட்டிற்கு வருவார். தற்போது அவர் காயத்தில் கொஞ்சம் முன்னேற்றம் அடைந்திருந்தாலும், அவருக்கு தொடர்ச்சியான ஓய்வு தேவைப்படுகிறது” என்று தெரிவித்தார்!