கிரிக்கெட்

“இந்திய அணிக்கு மிகப்பெரிய சிக்கல்” 2021 உலககோப்பையில் இந்தியாவை அச்சுறுத்திய வீரர் மீண்டும் வருகிறார்!

காயத்தினால் வெளியில் இருந்த சாஹின் அப்ரிடி உடல் தகுதியை நிரூபித்து மீண்டும் பாகிஸ்தான் டி20 உலக கோப்பை அணிக்கு திரும்பியுள்ளார்.

- Advertisement -

ஆசிய கோப்பை தொடருக்கு முன்பாக பாகிஸ்தான் அணி, இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. டெஸ்ட் தொடரின்போது, நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் சாஹின் அப்ரிடிக்கு காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக ஆசிய கோப்பை தொடரில் அவரால் பங்கேற்க முடியாமல் போனது. பாகிஸ்தான் அணிக்கு இது மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது.

காயத்தில் இருந்தபோதும் பாகிஸ்தான் அணியுடன் தொடர்ந்து பயணித்தார். பாகிஸ்தான் வீரர்களுடன் பயிற்சியிலும் ஈடுபட்டிருந்தார். இவருக்கு தீவிர மருத்துவ சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்தது. ஆசிக் கோப்பை தொடர்க்கும் முன்பாக, சாஹின் குணமடைவதற்கு நான்கு முதல் ஆறு வாரகாலம் தேவைப்படும் என கூறப்பட்டிருந்தது. அதற்கு ஏற்றார் போல அவரது உடல் நிலையும் நல்ல முன்னேற்றம் கண்டு வந்தது.

டி20 உலக கோப்பையில் பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்கிறது. 2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையின்போது ஷாஹின் அப்ரிடியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் திணறி ஆட்டம் இழந்தனர். மீண்டும் உலக கோப்பையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் ஷாஹின் அப்ரிடி இடம் பெறுவாரா? என கேட்கப்பட்ட கேள்விக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் சேர்மன் ரமிஷ் ராஜா பதில் அளித்துள்ளார். அவர் கூறுகையில்,

- Advertisement -

“110 சதவீதம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவார். அவர் போட்டிக்கு தயாராக இருக்கிறார். அவரது உடல்நிலை முழுவதுமாக குணமடைந்துவிட்டது. தொடர்ந்து பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.” என தெரிவித்திருந்தார்.

அதே நேரம் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா காயம் காரணமாக டி20 உலக கோப்பையில் இருந்து வெளியேறியுள்ளார். இது இந்திய அணிக்கு மேலும் பின்னடைவை தந்திருக்கிறது.