2011 இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் தொடர் உலகக்கோப்பையையும், 2013 இங்கிலாந்தில் நடந்த ஐசிசி தொடர் சாம்பியன்ஸ் டிராபியையும் இந்திய அணி கைப்பற்றிய பிறகு எந்த ஒரு உலகக்கோப்பையையும் ஐசிசி தொடரையும் இதுவரை கைப்பற்றவில்லை.
மகேந்திர சிங் தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து நகர்ந்த பிறகு இந்திய அணிக்கு உலகக்கோப்பை என்பது ஒரு பெரிய கனவாகவே இதனால் வரை இருந்து வருகிறது.
மரபு ரீதியான கிரிக்கெட்டில் இருந்து நகர்ந்து அதிரடியான கிரிக்கெட்டுக்கு மாறிய இங்கிலாந்து 2019, 2022ஆம் ஆண்டுகளில் இரண்டு உலகக்கோப்பைகளைக் கைப்பற்றி விட்டது.
2018ஆம் ஆண்டு பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் சிக்கி பெரும் நெருக்கடியைச் சந்தித்த ஆஸ்திரேலியாவும் சிறப்பான செயல்பாட்டுக்கு திரும்பி 2021 மற்றும் 2023 ஆண்டுகளில் இரண்டு உலகக்கோப்பைகளைக் கைப்பற்றி விட்டது.
ஆனால் சீராகச் செயல்பட்டு வந்த இந்திய அணிக்கு உலகக்கோப்பையில் நாக் அவுட் போட்டிகள் என்றாலே பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனால் முக்கியமான போட்டிகளில் தோல்வி அடைந்து வெளியேறுவது வாடிக்கையாகிவிட்டது.
இதுகுறித்து 1983 உலகக்கோப்பையை வென்ற வீரரும், முன்னாள் தேர்வுக்குழு தலைவருமான திலீப் வெங்சர்க்கர் இந்திய தேர்வுக்குழு மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் பொழுது
“துரதிஷ்டவசமான விஷயம் என்னவென்றால், கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக நான் பார்த்த தேர்வாளர்களுக்குத் தொலைநோக்குப் பார்வையோ, விளையாட்டு பற்றிய ஆழமான அறிவு அல்லது கிரிக்கெட் உணர்வு இல்லை என்பதுதான்.
இந்திய அணிக்கு முக்கியமான வீரர்கள் கிடைக்காத காலகட்டத்தில் இவர்கள் சிகர் தவானை கேப்டன் ஆக்கினார்கள். ஆனால் அப்படிப்பட்ட இடத்தில்தான் ஒரு புதிய கேப்டனை நாம் வளர்க்க முடியும்.
இவர்கள் யாரையும் சீர்படுத்தவில்லை. வந்தவர்களை வைத்துக்கொண்டு அப்படியே விளையாடினார்கள். உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியம் என்று பேசுகிறார்கள் ஆனால் பெஞ்ச் பலம் எங்கே? ஐபிஎல் தொடரின் ஒளிபரப்பு உரிமத்தை கோடிகளில் விற்பது மட்டுமே சாதனை கிடையாது!” என்று அதிரடியாகக் கூறியிருக்கிறார்!