2022 அபுதாபி டி10 லீக்கின் போட்டி அட்டவணை வெளியீடு

0
449
Abudhabi T10 league

கிரிக்கெட் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து, ஒருநாள் போட்டியாக புது வடிவம் எடுத்து, அடுத்து இருபது ஓவர் கிரிக்கெட் எனவும், 100 பந்து கிரிக்கெட் எனவும் சுருங்கியது. இதில் தற்போது கடைசி வடிவமாக இருப்பதுதான் பத்து ஓவர் கிரிக்கெட்!

கடந்த ஐந்து வருடங்களாக டி10 லீக் என்ற தொடர் வெற்றிக்கரமாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஆறாவது சீசன் வருகின்ன நவம்பர் 23ஆம் தேதி முதல் டிசம்பர் 4ஆம் தேதி வரை அபுதாபியில் நடக்க இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஐந்து வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அபுதாபியில் இது நான்காவது ஆண்டாக நடத்தப்படுகிறது!

- Advertisement -

கடந்த 2021ஆம் ஆண்டு அபுதாபி டி10 லீக் 621.2 மில்லியன் டாலர் அளவு பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும், ஒட்டுமொத்தமாக 342 மில்லியன் டிவி மற்றும் டிஜிட்டல் பார்வையாளர்களை இந்தத் தொடர் பெற்று இருப்பதாகவும், இந்தத் தொடர் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

மேலும் அபுதாபி விளையாட்டு கவுன்சில் செயலாளர் ஆரீப் அல் அவானி கூறுகையில் “டி10 லீக்கில் எங்களது பங்கின் மூலம், அபுதாபியை ஒரு முக்கிய விளையாட்டு மையமாக நிலைநிறுத்தி இருக்கிறோம். மேலும் பொழுதுபோக்கான கிரிக்கெட்டிற்கான திறனை உருவாக்கும் நகரமாகவும் அபிதாபியை மாற்றி நிரூபித்துள்ளோம்” என்று கூறியிருக்கிறார்!

இந்தத் தொடரில் நடப்பு சாம்பியன் டெக்கான் கிளாடியேட்டர்ஸ், டெல்லி புல்ஸ், சென்னை பிரேவ்ஸ், பங்களா டைகர்ஸ், நார்தர்ன் வாரியர்ஸ், டீம் அபுதாபி ஆகிய ஆறு அணிகள் பங்கேற்கின்றன. வஹாப் ரியாஸ், ஆன்ட்ரே ரசல், பாப் டூ பிளிசிஸ், லியாம் லிவிங்ஸ்டன், மொயின் அலி போன்ற உலகத்தரமான வீரர்கள் விளையாடுகிறார்கள். இந்தத் தொடர் மூலம் யு.ஏ.இ கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஒரு புதிய அனுபவமும், பயிற்சியும் கிடைக்குமென்று கூறப்பட்டுள்ளது. இந்தத் தொடரில் யு.ஏ.இ கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுவதால், அவர்கள் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுடன் பழகவும். கிரிக்கெட் குறித்தான ஆலோசனைகளைப் பெறவும் உதவியாக இந்தத் தொடர் அமைந்துள்ளது!

- Advertisement -

இந்தந் தொடரில் பங்கு பெறும் ஆறு அணிகளில் நான்கு அணிகள் ப்ளே ஆப்ஸ் சுற்றுக்குத் தகுதி பெற்று, அதிலிருந்து இறுதி போட்டிக்கு அணிகள் தேர்வாகி, டிசம்பர் 4ஆம் தேதி சாம்பியன் பட்டத்திற்கான இறுதி போட்டி நடைபெறும். இதன் அனைத்து போட்டிகளும் அபுதாபியின் சயீத் மைதானத்தில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. டி 10 போட்டி டி 20 போட்டிக்கு முற்றிலும் வேறானது. ஆரம்பம் முதல் இறுதி வரை அதிரடிதான். பவுண்டரி, சிக்ஸர்கள் மட்டுமே மதிக்கப்படும் அளவில் இருக்கும் தொடராகும்!