இந்தியா ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் ஐந்தாவது போட்டி இன்று நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் மகேந்திர சிங் தோனியை தாண்டி புதிய இரண்டு சாதனைகள் படைத்திருக்கிறார்.
இன்றைய போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற ஜிம்பாப்வே அணியின் கேப்டன் சிக்கந்தர் ராஸா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியில் ருதுராஜ் நீக்கப்பட்டு ரியான் பராக் சேர்க்கப்பட்டார். மேலும் வேகப் பந்துவீச்சாளர் கலீல் அகமது வெளியேற முகேஷ் குமார் உள்ளே வந்தார்.
இந்த முறையும் இந்திய அணிக்கும் துவக்க ஆட்டக்காரர்களாக வந்த கில் 13 பந்தில் 14 ரன் மற்றும் ஜெய்ஸ்வால் 5 பந்தில் 12 ரன், அபிஷேக் ஷர்மா 11 பந்தில் 14 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். இன்றைய போட்டியில் வாய்ப்பு பெற்ற ரியான் பராக் சற்று தாக்குப் பிடித்து விளையாடி 24 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்.
சிவம் துபே 12 பந்தில் 26 ரன்கள், ரிங்கு சிங் 9 பந்தில் 11 ரன் எடுத்தார்கள். ஒரு முனையில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்தார். அவர் 45 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 58 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. முஸரபாணி இரண்டு விக்கெட் கைப்பற்றினார்.
இன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக அரை சதம் அடித்ததன் மூலம், அந்த அணிக்கு எதிராக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் முதல் அரை சதம் அடித்த இந்திய விக்கெட் கீப்பர் என்கின்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்தார்.
இதையும் படிங்க : 66 ஆவரேஜ் 158 ஸ்ட்ரைக் ரேட்.. ஆனால் ருதுராஜ் வெளியே.. கில் உள்ளே.. பின்னணி காரணம் என்ன?
மேலும் விக்கெட் கீப்பராக மகேந்திர சிங் தோனி தனது முதல் சர்வதேச டி20 அரைசதத்தை அடிக்க 66 இன்னிங்ஸ்கள் தேவைப்பட்டது. சஞ்சு சாம்சன் 10 இன்னிங்ஸ்களில் அடித்திருக்கிறார். இந்த வரிசையில் விக்கெட் கீப்பராக கேஎல்.ராகுல் விளையாடிய முதல் இன்னிங்ஸிலும், இஷான் கிஷான் 3 மற்றும் ரிஷப் பண்ட் 5வது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.