ஐபிஎல் 2026 தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி சாம்பியன் பட்டம் வெல்ல மிக முக்கிய காரணமாக இருந்த அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரை, இந்திய டி20 அணியில் உடனடியாக சேர்த்திருக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 18-க்கும் குறைவான சராசரியிலும் 7.95 எகானமி ரேட்டிலும் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி புவனேஷ்வர் குமார் அசத்தினார். இதன் மூலம் ஆர்சிபி அணி தனது இரண்டாவது ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்ற உதவினார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது அவர் நியூசிலாந்து தொடருக்கான இந்திய டி20 அணியில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசும்போது “எந்தவொரு பௌலரும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால், அவரை உடனடியாக இந்திய அணியில் தேர்வு செய்ய வேண்டும் என்பது எனது நம்பிக்கை. ஏனெனில் பேட்டர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும் இந்திய ஆடுகளங்களில் ஐபிஎல் போன்ற தொடரில் ஒரு பௌலர் சீசன் முழுவதும் சிறப்பாக பௌலிங் செய்வது மிகப்பெரிய சாதனையாகும்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் பேசும்போது “அவரது தேர்வு மிகவும் சிறப்பானது. கடந்த ஐபிஎல் தொடர் முடிந்த உடனேயே அவர் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன், ஏனெனில் அவர் எகானமி ரேட் கட்டுப்பாட்டிலும், விக்கெட்டுகள் வீழ்த்துவதிலும் மிகவும் சிறப்பாகவும் தொடர்ச்சியாகவும் இருந்தார், அவர் பந்தோடு ஆட்டத்தின் போக்கையே மாற்றுபவராக இருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் “புவனேஷ்வர் குமாரின் பழைய சிந்தனை முறையும் கிரிக்கெட் அறிவும், தற்போதைய நவீனகால பேட்டர்கள் மற்றும் பவர் ஹிட்டர்களுக்கு எதிரான அவருடைய திறன்களோடு சேரும்போது இந்திய அணிக்கு அது சிறந்த காம்பினேஷனாக இருக்கும். அவர் குறுகிய சேனலில் பௌலிங் செய்து, ஸ்டம்புகளை தாக்கி, காற்றில் மற்றும் பிட்ச்சில் தனது ஆங்கிள்கள் மூலம் ரன்களை விட்டுக்கொடுக்காமல் கட்டுப்படுத்துவார். வருண் சக்கரவர்த்தி தனது ரிஸ்ட் ஸ்பின் மூலம் ஸ்டம்ப்-டு-ஸ்டம்ப் பௌலிங் செய்வது போல, புவனேஷ்வர் குமாருக்கும் இதுவே பெரிய பலமாக இருக்கும், தேர்வாளர்களின் இந்த முடிவு பாராட்டுக்குரியது” என்று கூறி முடித்துள்ளார்.






