இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் முடிவில், நடுவர்களிடம் தேவையற்ற முறையில் விவாதம் செய்து இலங்கை வீரர்கள் தங்கள் கவனத்தைச் சிதறடித்துக் கொண்டதை முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வெளிச்சமின்மையைக் காரணம் காட்டி நடுவர்களுடன் இலங்கை ஆட்டக்காரர்கள் விவாதித்த நேரத்தில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் மனவ் சுதார் அபாரமாகப் பந்துவீசி பிரபாத் ஜெயசூர்யாவின் விக்கெட்டைக் கைப்பற்றினார்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், “இலங்கை வீரர்கள் நடந்துகொண்ட விதம் சற்று அன்-ப்ரொஃபஷனலாக இருந்தது. வெளிச்சம் குறைவாக இருக்கிறது என்று நடுவரிடம் முறையிடுவது சரிதான். ஆனால் அதற்காகப் பந்தின் மீதிருக்கும் கவனத்தை முற்றிலுமாக இழந்துவிடக் கூடாது. வெளிச்சமின்மை பற்றிய கவலையே அவர்களின் மனதை ஆக்கிரமித்து விட்டது. பந்தை பார்க்க முடியாத அளவுக்கு மைதானத்தில் வெளிச்சம் ஒன்றும் அவ்வளவு மோசமாக இல்லை,” என்று நேரடியாகச் சாடியுள்ளார்.
மேலும் பேசிய அவர், “ஒரு நைட் வாட்ச்மேன் அவுட் ஆனதற்கு வெளிச்சத்தைக் காரணம் சொல்ல முடியாது. மனவ் சுதார் வீசிய அந்தப் பந்து மிகச் சிறப்பான வேரியேஷன் கொண்டது. இந்தச் சூழ்நிலையைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இந்திய அணியின் புத்திசாலித்தனத்தைப் பாராட்ட வேண்டும். மழை வந்தபோது இந்திய வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறாமல் நின்று, ஆட்டத்தைத் தொடரலாம் என்று நடுவர்களுக்கு மறைமுகமாக பிரஷர் கொடுத்தார்கள்,” என்று கூறினார்.
முன்னதாக இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜூரல் ஆகிய இரு வீரர்களும் அபாரமாக ஆடி செஞ்சுரி அடித்தனர். இவர்களின் சிறப்பான பேட்டிங் காரணமாக இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 503 ரன்கள் குவித்துப் பலமான நிலையில் டிக்ளேர் செய்தது. தற்சமயம் இந்திய அணியை விட 495 ரன்கள் பின் தங்கிய நிலையில் இலங்கை அணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது.