ரிஷப் பண்ட்டை திட்டுங்க.. ஆனா இந்த விஷயத்துக்காக திட்டாதீங்க.. அவர் ஒரு பெஸ்ட் பிளேயர் – சஞ்சய் மஞ்சுரேக்கர் பேட்டி

0
137

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை விட ரிஷப் பண்ட் அதிக அளவில் விமர்சிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் ரிஷப் பண்ட் குறித்து சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் தோல்வி

ரிஷப் பண்ட் கடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடரில் கபாவில் நடைபெற்ற கடைசி டெஸ்ட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்தார். அந்த போட்டிக்குப் பிறகு ரிஷப் பண்ட் டெஸ்ட் அணியில் ஒரு முக்கிய வீரராக உருவெடுத்தார். அதற்குப் பிறகு தனது அதிரடியான இன்னிங்ஸ்களின் மூலம் பல வெற்றிகளை இந்திய அணிக்காக பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு சீசன்களாக அவரது பேட்டிங் ஃபார்ம் சர்ச்சையை உண்டாக்கி வருகிறது. அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் மோசமான ஷாட் விளையாடி தேவையில்லாமல் தனது விக்கட்டை பறி கொடுக்கிறார் என்று அவர் மீது விமர்சனங்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான நான்காவது போட்டியில் டிரா செய்யும் இடத்தில் இருந்த இந்திய அணியை ரிஷப் பண்ட் தேவையில்லாத ஷாட் விளையாடி இந்திய அணி தோல்வியடைய காரணமாக அமைந்துவிட்டார் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி வரும் நிலையிலும் அவர்களை விட பண்ட் அதிகமாக இந்திய முன்னாள் வீரர்களால் விமர்சிக்கப்பட்டு வருவதை தொடர்ந்து சஞ்சய் மஞ்சுரேக்கர் அது குறித்து தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

தோல்விக்காக மட்டுமே விமர்சனம் செய்ய வேண்டும்

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “ரிஷப் பண்ட் தோல்வியடைந்ததற்காக மட்டுமே விமர்சிக்கப்பட வேண்டுமே தவிர எப்படி தோல்வி அடைந்தார் என்பதை விமர்சனம் செய்யக்கூடாது. ஒரு இந்திய வீரராக ரிஷப் பண்ட் டெஸ்ட் போட்டியில் 42 சராசரியை வைத்து மூன்று சிறந்த இன்னிங்ஸ்களை விளையாடியிருக்கிறார். மொத்தமாக 42 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6 சதம் மற்றும் 7 முறை 90களில் ஆட்டமிழந்திருக்கிறார். பண்ட் ஒரு மிகச் சிறந்த வீரர், ஆனால் போதுமான ரன்கள் எடுக்கவில்லை என்பதே உண்மை. அதுதான் இதில் இருக்கும் முக்கிய அம்சம்” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதி இருக்கிறார்.

இதையும் படிங்க:வாசிம் அக்ரம் மெக்ராத் லெஜண்ட்ஸ்தான்.. ஆனா 2013-14ல அவருக்கு அடுத்து .. நான் பார்த்ததுலயே பெஸ்ட் பும்ராதான் – ஆஸி டேரன் லீமன்

ரிஷப் பண்ட் நான்காவது போட்டியின் முதல் இன்னிங்சில் அசாதாரண ஷாட் ஒன்றை விளையாடி ஆட்டம் இழந்ததால் சுனில்க கவாஸ்கரால் முட்டாள் என்று விமர்சிக்கப்பட்டார். ஆனால் அதற்கு முன்னர் இதுபோன்ற அசாதாரண ஷாட்கள் விளையாடி அனைவரிடமும் பாராட்டைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையே சஞ்சய் மஞ்சுரேக்கர் அவர் ஆட்டம் இழந்ததற்காக விமர்சிக்கப்பட வேண்டுமே தவிர எப்படி ஆட்டமிழந்தார் என்று விமர்சனம் செய்யக்கூடாது என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -