இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வரும் இருபதாம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணியில் நம்பர் மூன்றாவது வீரராக கருண் நாயர் களமிறங்க கூடாது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் பங்கர் அறிவுறுத்தியுள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “என்னுடைய பார்வையில், கில் அல்லது கருண் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்யக் கூடாது. கருண் நாயர் விளையாடினால், அவர் சற்று கீழ் வரிசையில் பேட்டிங் செய்யலாம். எல்லா அறிகுறிகளும் ஷுப்மன் கில் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்வார் என்பதை உணர்த்துகின்றன.”
“எனவே, மூன்றாவது இடத்திற்கு சாய் சுதர்சனுக்கும் அபிமன்யு ஈஸ்வரனுக்கும் இடையே போட்டி இருக்கும். ஈஸ்வரன், அவர்கள் விளையாடிய பயிற்சி ஆட்டங்களில் ஒன்றில் நல்ல ரன்கள் எடுத்தார். அந்த இருவரில் ஒருவர் மூன்றாவது இடத்தில் விளையாடுவார்.”
” நான்காவது இடத்தில் ஷுப்மன் கில், ஐந்தாவது இடத்தில் ரிஷப் பந்த், ஆறாவது இடத்தில் கருண் நாயர் இருப்பார். இதுதான் எனது புரிதல்,” என்று பங்கர் கூறினார். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு எவ்வாறு இருக்கும் என்பது குறித்தும் சில கேள்விகள் உள்ளன.”
“ஜஸ்பிரீத் பும்ரா தொடக்க வீரராக நிச்சயம் இடம்பெறுவார், அவருடன் முகமது சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா இணையலாம். இருப்பினும், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆகாஷ் தீப் ஆகியோர் கென்ட்டில் நடக்கும் intra squad ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு அணி நிர்வாகத்திற்கு தலைவலியை தரலாம். “
“நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோர் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்கள். இந்தியா ஏ மற்றும் இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட்களிலும் இருவரும் நல்ல முறையில் செயல்பட்டனர். அவர்களில் ஒருவர் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது”என்று சஞ்சய் பங்கர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடருக்கு சிக்கல்.. பாகிஸ்தான் எடுத்த முடிவு.. துபாயில் நடைபெறும் புதிய தொடர்.. விவரம்
இதனிடையே சுழற்பந்துவீச்சாளர் இடத்திற்கு இந்தியா யாரை பயன்படுத்தபோகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜடேஜா, வாசிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் ஆகிய 3 வீரர்கள் உள்ளனர். இதில் ஸ்பெசலிஸ்ட் ஸ்பின்னரான குல்தீப்க்கு இடம் தர வேண்டும் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.