தன்னுடைய பேட்டிங் பார்ட்னர் சேவாக் எப்பொழுதும் தான் சொல்வதைக் கேட்க மாட்டார் என்றும் அதற்காகத்தான் ஒரு சிறப்பு திட்டத்தை வைத்திருந்தேன் எனவும் சச்சின் டெண்டுல்கர் சுவாரசியமான தகவல் ஒன்றைக் கூறி இருக்கிறார்.
இந்திய ஜனாதிபதி அவர்களுடனான ஒரு கௌரவ சந்திப்பில் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் எவ்வாறு வீரர்களை புரிந்து கொள்வதற்கான மற்றும் உறவுகளை வளர்த்துக் கொள்வதற்கான வழிகளை கொடுக்கிறது என்பது குறித்து பேசும் பொழுது இந்த தகவலை வெளியிட்டிருக்கிறார்.
தற்போது தன் சொல்பேச்சை சேவாக் எப்பொழுதும் கேட்க மாட்டார் என்று சச்சின் டெண்டுல்கர் அவர்கள் கூறியிருந்த போதும், யார் பேட்டிங் செய்வதை பார்க்க விரும்புவீர்கள் என்று ஒரு முறை கேட்ட பொழுது சேவாக் பேட்டிங் செய்வதை பார்க்க விரும்புவேன் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு அவர் அச்சமற்ற முறையில் விளையாடுவதை சச்சின் டெண்டுல்கர் ரசிக்க கூடியவராக இருந்தார்.
சவுரவ் கங்குலி கேப்டனாக இருந்த காலத்தில் சச்சின் காயம் பட்டிருந்த நேரத்தில் சேவாக்கை துவக்க வீரராக கொண்டு வந்தார். பின்பு சச்சின் வந்த பிறகு சவுரவ் கங்குலி தன்னை மூன்றாவது இடத்துக்கு இறக்கிக் கொண்டு, சச்சின் மற்றும் சேவாக் தொடக்க வீரர்களாக களம் இறங்க வழி அமைத்துக் கொடுத்தார். இந்த துவக்க ஜோடியும் இந்திய வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் அற்புதமான சாதனைகளை செய்திருக்கிறது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முதல் பந்தில் இருந்து அடித்து விளையாடும் ஆக்ரோஷமான பேட்ஸ்மேன்களில் மிக முக்கியமானவராக சேவாக் விளக்குகிறார். காரணம் அவருடைய தாக்குதல் பெரும்பாலும் துல்லியமாகவே இருக்கும். இதன் காரணமாகத்தான் அவருக்கு நேர் எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அவரால் இரண்டு முச்சதங்கள் அடிக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : கிரிக்கெட் டீம் விளையாட்டு.. கேஎல் ராகுல் இதை செய்தது நியாயமே இல்ல – சுனில் கவாஸ்கர் விமர்சனம்
சேவாக் குறித்து சச்சின் பேசும்பொழுது “சேவாக் நான் விரும்புவதற்கு எதிராக அடிக்கடி செய்யக் கூடியவர். அவர் கொஞ்சம் பொறுமையாக விளையாட வேண்டும் என்று நான் விரும்பினால் அவர் அதை செய்ய மாட்டார். இதற்காகவே நான் அவரிடம் சென்று நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே அடித்து விளையாடுங்கள் என்று கூறுவேன். உடனே அவர் என் விருப்பத்திற்கு மாறாக இல்லை நான் முதல் நான்கு ஓவர்கள் பொறுமையாக விளையாடுகிறேன் என்று கூறுவார். இப்படி அவரிடமிருந்து சிறந்ததை பெறுவதற்கு நான் நேர்மாறாக சொல்ல வேண்டி இருந்தது. பிறகு விரும்பியது கிடைத்துவிட்டது என்று புன்னகைத்தப்படியே சென்று விடுவேன்” என்று கூறியிருக்கிறார்.