வங்கதேசம் அணிக்கு ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை வரை புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் எஸ் ஸ்ரீராம்.
இந்திய அணியின் முன்னாள் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான எஸ் ஸ்ரீராம் ஆஸ்திரேலியா அணியில் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்து வந்தார். இந்திய அணிக்கு 2000 முதல் 2004 வரை அவர் எட்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.
2000ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார். கடைசியாக 2004ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு இந்திய அணியில் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 2015 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா ஏ அணிக்கு பயிற்சியாளராக தனது பணியை துவங்கினார் ஸ்ரீராம். வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா டெஸ்ட் அணிக்கு ஆலோசகராக இருந்தார். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய தொடரில் ஆஸ்திரேலிய தலைமை பயிற்சியாளரின் உதவியாளராக இருந்தார். பிறகு 2019 ஆம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் பேட்டிங் மற்றும் சுழல் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு பணியாற்றினார். சமீபகாலமாக ஆஸ்திரேலியா அணியின் சுழல் பந்துவீச்சு பயிற்சியாளராக ஸ்ரீராம் இருந்து வந்தார்.
இப்படி பயிற்சியாளர் பொறுப்பில் நிறைந்த அனுபவம் கொண்ட எஸ் ஸ்ரீராம், நடைபெறவிருக்கும் ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை இரண்டிற்கும் வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது. இதனால் ஆஸ்திரேலியா அணியின் சுழல்பந்துவீச்சு பயிற்சியாளர் பொறுப்பை ராஜினாமா செய்துவிட்டு வங்கதேச அணியின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
தற்போது வங்கதேச அணியின் தலைமை பயிற்சியாளராக ரசல் டாமின்கோ இருக்கிறார். அவர் தொடர்ந்து டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக இருப்பார். இந்த இரண்டு பெரிய தொடர்களுக்கு மட்டும் ஸ்ரீராம் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து வங்கதேச அணி நிர்வாகத்தின் இயக்குனர் கூறுகையில், “ஆம். ஸ்ரீராம் டி20 உலக கோப்பை வரை வங்கதேச அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். புதிய மனநிலை மற்றும் புதிய கோச் இரண்டும் வங்கதேசம் அணிக்கு உத்வேகமாக இருக்கும். இவரை டி20 உலக கோப்பைக்காக எடுத்திருக்கிறோம். நேரடியாக டி20 உலக கோப்பைக்கு முன்பு நியமித்திருந்தால், அணியினரின் மனநிலையை புரிந்து கொண்டு நடப்பது கடினமானதாக இருந்திருக்கும். ஆகையால் முன்னோட்டமாக இந்த ஆசிய கோப்பை தொடரிலிருந்து அவர் தனது பயிற்சியை துவங்குகிறார்.
வங்கதேச அணியின் முக்கிய நோக்கமாக இருப்பது டி20 உலகக் கோப்பை தொடர். அதை குறிக்கோளாக வைத்து, இப்போது இந்த நியமனம் நடந்திருக்கிறது. டாமின்கோ தனது பயிற்சியாளர் பதவியில் தொடர்ந்து நீடிப்பார். டி20 உலக கோப்பை தொடர் முடிவுற்ற பிறகு நவம்பர் மாதம் துவங்க இருக்கும் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து அவர் தனது பயிற்சியாளர் பதவியை தொடர்வார். அதுவரை ஸ்ரீராம் தனது பணியில் இருப்பார்.” என நிர்வாக இயக்குனர் தெரிவித்தார்.