IND vs SA.. ருதுராஜ் செய்த தவறு.. கண்டுகொள்ளாமல் சென்ற ஆவேஷ் கான்.. அடுத்த ஓவரிலேயே கிடைத்த பலன்

0
557

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் வான்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி கேப்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். இந்திய அணி தரப்பில் தமிழக வீரர் சாய் சுதர்சன் அறிமுகம் செய்யப்பட்டார். அதேபோல் ரிங்கு சிங்கிற்கான வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பிங்க் ஜெர்சியுடன் களமிறங்கியது. தென்னாப்பிரிக்கா அணி தரப்பில் ஹென்ரிக்ஸ் – டோனி டீ சோர்ஸி கூட்டணி களமிறங்கியது. இந்திய அணி தரப்பில் முகேஷ் குமார் முதல் ஓவரை வீசினார். அதன்பின் 2வது ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங்கின் 4வது பந்தில் ஹென்ரிக்ஸ் போல்டாகி வெளியேறினார்.

- Advertisement -

தொடர்ந்து வந்த நட்சத்திர வீரர் வான்டர் டூஸனும் அடுத்த பந்திலேயே ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோர் 3 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்றானது. அதன்பின் டோனி – மார்க்ரம் கூட்டணி சிறிது தாக்கு பிடித்தது. ஆனால் அர்ஷ்தீப் சிங்கின் அபார பந்துவீச்சில் டோனி டீ சோர்ஸியும் 28 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, 42 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தென்னாப்பிரிக்கா அணி பரிதாப நிலைக்கு சென்றது.

அப்போது தென்னாப்பிரிக்கா அணியை காப்பாற்ற கேப்டன் மார்க்ரம் – அதிரடி வீரர் கிளாஸன் கூட்டணி இணைந்தது. அதன்பின் உடனடியாக கேப்டன் கேஎல் ராகுல் இந்திய அணியின் இளம் பவுலரான ஆவேஷ் கானை அட்டாக்கில் கொண்டு வந்தார். அந்த ஓவரின் 4வது பந்திலேயே ஆவேஷ் கான் வீசிய பந்து எட்ஜாகி ஸ்லிப் திசையில் பறந்தது.

அப்போது 2வது ஸ்லிப்பில் நின்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட் கேட்ச் பிடிக்க முடியாமல் கோட்டைவிட்டார். இதனால் அந்த பந்து பவுண்டரிக்கு சென்றது. இதனால் சோகமடைந்த ருதுராஜ் கெய்க்வாட் குழப்பமாக நின்றிருந்தார். ஆனால் பவுலர் ஆவேஷ் கான் எந்தவித சோகமும் இல்லாமல் அடுத்த பந்தை வீச சென்றார்.

- Advertisement -

கிளாஸன் போன்ற வீரர்களை வீழ்த்துவதே கடினமாக ஒன்றாக இருக்கும் சூழலில், அவர் கொடுத்த கேட்சை ருதுராஜ் கெய்க்வாட் தவறவிட்டது மிகப்பெரிய தவறாக பார்க்கப்பட்டது. ஆனால் அர்ஷ்தீப் சிங் வீசிய அடுத்த ஓவரின் கடைசி பந்திலேயே கிளாஸன் 6 ரன்களில் போல்டாகி வெளியேறினார். இதனால் சோகத்தில் நின்றிருந்த ருதுராஜ் கெய்க்வாட் சிறிது நிம்மதியடைந்தார்.