இந்தியா அணி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் கேப்டன் ரோஹித் சர்மா தலைமையில் மிகவும் சிறப்பாக விளையாடி வருகிறது.
இந்திய அணியின் பந்துவீச்சு இந்த முறை யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மிகச் சிறப்பாக இருக்கிறது. முகமது சமி அற்புதமான முறையில் பந்து வீசி வருகிறார்.
அதே சமயத்தில் பேட்டிங் என்று எடுத்துக் கொண்டால் துவக்க வீரராக வரும் கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியாக விளையாடி அடுத்து வரும் வீரர்களுக்கு எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல் செய்து விடுகிறார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் அதிக முறை 40க்கும் மேற்பட்ட ரணகளிலும் 80க்கும் மேற்பட்ட ரணகளிலும் ஆட்டம் இழந்து வருகிறார். அரை சதத்திற்கோ இல்லை சதத்திற்கோ அவர் முக்கியத்துவம் தருவது கிடையாது.
உலகக் கோப்பை வரலாற்றில் அதிரடியாக துவக்கம் தந்த பிரன்டன் மெக்கலம் சாதனையை தகர்த்து அதைவிட அதிரடியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.
அதே சமயத்தில் ஒரு கேப்டனாக அணி சூழலை மிகவும் சிறப்பாக பராமரித்து வருகிறார். வீரர்கள் ஒருவருக்கொருவர் நல்ல நட்புடனும் ஒற்றுமையுடனும் இருந்து வருகிறார்கள். அணிக்குள் நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படுகிறது.
இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் யுவராஜ் சிங் கூறும் பொழுது “ரோகித் சர்மா வேற லெவலில் பேட்டிங் செய்கிறார். அவர் 40 பந்துகள் விளையாடினால் 80 ரன்கள் எடுப்பார். அவர் மொத்தமாக 100 பந்துகள் விளையாடினால் அவரால் 200 ரன்கள் கூட எடுக்க முடியும்.
ரோகித் சர்மா எப்பொழுதும் ஒரு அணி வீரர். அவரைப் பொறுத்தவரை எப்பொழுதும் அணியே முதலிடத்தில் இருக்கிறது. அதனால்தான் அவர் மிகவும் வெற்றிகரமாக இருந்தார். குறிப்பாக வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில்.
ரோஹித்தின் சிறந்த விஷயம் என்னவென்றால் அவர் அழுத்தத்தின் கீழ் அமைதியான கேப்டனாக இருக்கிறார். அவர் வென்ற ஐந்து ஐபிஎல் பட்டங்களும் அவருக்கு சிறந்த அனுபவத்தை கொடுத்திருக்கின்றன. அவருக்கு பந்துவீச்சாளர்களை எங்கு எப்பொழுது பயன்படுத்த வேண்டும் என்று நன்றாக தெரியும்!” என்று கூறி இருக்கிறார்!