இந்திய டி20 அணிக்கு கடந்த ஒரு வருடமாக தலைமையேற்று நடத்தி வந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஹரிதிக் பாண்டியா, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் காயமடைந்து வெளியில் இருக்கிறார்.
இந்த நேரத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் நெருங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் தற்பொழுது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரும் நடந்து கொண்டிருக்கிறது.
எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹர்திக் பாண்டியா இடத்துக்கு மிக வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் சிவம் துபேவை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு கொண்டு வந்திருக்கிறது.
இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்து ஐந்து விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் பந்துவீச்சில் சிவம் துபே இரண்டு ஓவர்கள் பந்துவீசி 9 ரன்கள் மட்டும் தந்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
இதற்கடுத்து பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு ஒரு புறத்தில் சராசரியாக விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருக்க, இன்னொரு புறத்தில் சிவம் துபே சூழ்நிலையை உணர்ந்து ஆரம்பத்தில் பொறுமை காட்டி அதற்குப் பிறகு அதிரடியாக விளையாடினார்.
இன்றைய போட்டியில் சிவம் துபே பேட்டிங்கில் 5 பவுண்டர்கள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 40 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 60 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்தார். பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட அவருக்கே ஆட்டநாயகன் விருதும் தரப்பட்டது.
ஆட்டநாயகன் விருது பெற்ற சிவம் துபே பேசும்பொழுது “இங்கு மிகவும் குளிராக இருந்தது. ஆனாலும் இந்த மைதானத்தில் விளையாடுவது மகிழ்ச்சி அளித்தது. நீண்ட நாட்கள் கழித்து நான்காம் இடத்தில் விளையாடுவது கொஞ்சம் அழுத்தமாக இருந்தது. ஆரம்பத்தில் இரண்டு மூன்று பந்துகள் நெருக்கடியாக உணர்ந்தேன்.
அதற்குப் பிறகு நான் பந்தில் கவனம் செலுத்தினேன். பெரும்பாலும் என்ன நடக்கிறது என்பது குறித்து நான் அதிகம் யோசிப்பதில்லை. டி20 கிரிக்கெட்டில் நான் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும். என்னால் பெரிய சிக்சர்கள் அடிக்க முடியும் என்றும் தெரியும். அதனால் எந்த நேரத்திலும் என்னால் ரன்களை கொண்டுவர முடியும். பந்துவீச்சில் ஒரு வாய்ப்பு கிடைத்தது அதில் எனக்கு தேவையானதை கொண்டு வந்தேன்.
ஆட்டத்தை முடித்த பிறகு ரோகித் சர்மா நான் சிறப்பாக விளையாடியதாக கூறினார். மேலும் இனி வரும் போட்டியில் என் ஆட்டத்தை இம்ப்ரூவ்மெண்ட் செய்வது தொடர்பாக டிஸ்கஸ் செய்யலாம் என்றும் கூறியிருக்கிறார்” என்று தெரிவித்திருக்கிறார்!