இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 26ஆம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த சூழ்நிலையில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதால் அவருக்கு பதிலாக அனுபவ வீரர் குல்தீப் யாதவை தேர்வு செய்யாமல் இளம் வீர தனுஷ்கோட்டியானை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா நான்காவது டெஸ்ட்
இந்திய அணியின் நட்சத்திர அனுபவ சுழற் பந்துவீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். இது இந்திய முன்னாள் வீரர்கள் இடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்திய அணி அடுத்ததாக விளையாட உள்ள மென்போர்ன் மைதானம் ஓரளவு சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் நிலையில் ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற உள்ளது.
இது சுழற்பந்து வீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்பதால் அஸ்வினுக்கு பதிலாக குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவரும் நம்பினார்கள். ஆனால் அவருக்கு பதிலாக இந்தியா இளம் வீரரான உள்நாட்டுத் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் தனுஷ் கோட்டியான் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இளம் வீரர் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சமீபத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அதற்கான காரணம் குறித்து பேசி இருந்தார்.
இந்திய இளம் வீரர் தேர்வு செய்ய காரணம்
இதுகுறித்து ரோகித் சர்மா கூறும் போது “தனுஷ்கோட்டியான் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஆஸ்திரேலியா வந்தடைந்தார். குல்தீப்புக்கு விசா கிடைக்காத காரணத்தால் அவரால் வர முடியவில்லை. எனவே யாராவது ஒருவர் அவசரமாக தேவை என்பதால் இவரை வரவழைத்தோம். இதை நகைச்சுவைக்காக மட்டுமே கூறினேன். அதாவது தனுஷ் கடந்த இரண்டு வருடங்களில் இந்திய உள்நாட்டு தொடரில் என்ன செய்திருக்கிறார் என்ன சாதித்துள்ளார் என்பதை பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க:358 ரன்.. ஒருநாள் தொடரில் மெகா சாதனை.. 4 பேர் அபார ஆட்டம்.. வெஸ்ட் இண்டீஸ் 2வது ODI.. இந்திய அணி வெற்றி
எங்களுக்கு நிச்சயம் ஒரு மாற்று வீரர் தேவை. அடுத்த போட்டி அல்லது சிட்னியில் விளையாடும் டெஸ்ட் போட்டியில் இரண்டு ஸ்பின்னர்கள் விளையாடினால் நிச்சயம் ஒரு மாற்று வீரர் தேவைப்படுவார். அதுமட்டுமல்லாமல் குல்தீப் சமீபத்தில் காயமடைந்திருக்கும் நிலையில் அவர் இந்த டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு போதுமான உடல் தகுதியுடன் இல்லை. அக்சாரும் பல்வேறு காரணங்களால் இதில் பங்கு பெற முடியாமல் போக தனுஷ் எங்களுக்கு சிறந்த மாற்று வீரராக இருந்தார். மேலும் அவர் ரஞ்சி தொடரில் சிறப்பாக விளையாடி வருகிறார் என்று கூறியிருக்கிறார்.






