ரோகித் சர்மா செமி-பைனலில் ஆடுவதில் சிக்கல்; வலைப்பயிற்சியின்போது கையில் காயத்தால் பாதியில் வெளிநடப்பு! மாற்று வீரர் யார்?

0
10531
Rohit Sharma

அரை இறுதிக்கு முன் பயிற்சியில் ஈடுபட்டிருந்த ரோகித் சர்மாவின் கையில் காயம் ஏற்பட்டுள்ளதால் பாதியிலேயே வெளியேறியுள்ளார். அரை இறுதியில் பங்கேற்பதும் சிக்கலாகி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் எட்டாவது டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று முடிவுக்கு வந்திருக்கிறது. இதிலிருந்து நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் குரூப் ஒன்றில் இருந்தும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் குரூப் இரண்டிலிருந்தும் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

- Advertisement -

முதல் அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் சிட்னி மைதானத்தில் மோதுகின்றன. இப்போட்டி நவம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ளது.

இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அடிலெய்டு மைதானத்தில் மோதுகின்றன. வருகிற 10-ம் தேதி நடைபெறும் இப்போட்டிக்கு முன்பு இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் வெளியில் அமர்த்தப்பட்டு இருந்த தினேஷ் கார்த்திக் முழு உடல் தகுதி பெற்று மீண்டும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஹர்திக் பாண்டியா, உடல் ரீதியாக அசோகரித்தை உணர்வதால் ஒருநாள் பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு ஓய்வில் இருந்தார்.

- Advertisement -

அதேபோல் ரோகித் சர்மாவும் முதல் நாள் பயிற்சியில் ஈடுபடாமல் ஓய்வில் இருந்தார். பிறகு நவம்பர் 7ம் தேதி மீண்டும் பயிற்சிக்கு திரும்பிய ரோகித் சர்மா பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது, பந்து கையில் பட்டதால் காயம் தீவிரமாக ஏற்பட்டிருக்கிறது. இதனால் பயிற்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறியுள்ளார்.

இன்னும் இரண்டு நாட்கள் அரையிறுதி போட்டிக்கு இருக்கின்றது. அதற்குள் அவர் குணமடையவில்லை என்றால் வெளியில் அமர்த்தப்படுவதற்கு அநேக வாய்ப்புகள் இருக்கின்றன. தற்போது இருக்கும் இந்திய அணியில் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுலைத் தவிர வேறு துவக்க வீரர்கள் இல்லை.

இருவரில் ஒருவர் காயத்தினால் வெளியில் அமர்த்தப்படும் நிலை ஏற்பட்டால், அந்த இடத்திற்கு அதிகபட்சம் ரிஷப் பன்ட் துவக்க வீரராக உள்ள எடுத்து வரப்படலாம். இந்நிலையில் ரோகித் சர்மா வெளியில் அமர்த்தப்படும் பட்சத்தில் தினேஷ் கார்த்திக் உள்ளே வருவார். ரிஷப் பன்ட் துவக்க வீரராக களம் இறக்கப்படுவதற்கு அநேக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.

இருப்பினும் ரோகித் சர்மா விரைவில் குணமடைந்து இந்திய அணியை அரை இறுதிப் போட்டியின்போது வழிநடத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.