இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான ரோஹித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் ரோஹித் சர்மா ஒருநாள் கிரிக்கெட் குறித்த தனது ஆர்வத்தை பகிர்ந்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரை இந்திய அணிக்காக வென்று கொடுத்ததோடு டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதற்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்று தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே தொடர்ந்து தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.
மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்த ரோஹித்தை கேப்டன் பதவியிலிருந்து நீக்கிவிட்டு கில்லை கேப்டனாக இந்திய நிர்வாகம் அறிவித்தது. இருப்பினும் தொடர்ந்து ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வரும் இவர் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகக் கோப்பையை வெல்வதே தமது இலக்கு என்று ரோஹித் சர்மா சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “50 ஓவர் உலகக் கோப்பை தொடரை பார்த்துதான் நான் வளர்ந்தேன். அந்த காலத்தில் டி20 உலக கோப்பை தொடரோ, ஐபிஎல் தொடரோ, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்றோ எதுவும் கிடையாது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் ஒரு நாள் உலகக் கோப்பை தான் கிரிக்கெட்டின் உச்சமாக இருந்தது. அந்த ஒற்றைக்கோப்பைக்கு அவ்வளவு மதிப்பு இருந்தது. அது எனக்கு கட்டாயம் வேண்டும்.
அதனை பெறுவதற்காக என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன்” என்று ரோகித் சர்மா பேசியிருக்கிறார். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா இறுதிப் போட்டியை தவிர அனைத்து போட்டிகளையும் வெற்றி பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.






