சர்வதேச கிரிக்கெட்டில் 1970களில் கிளைவ் லாயிட் தலைமையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் மற்றும் 2000ல் ரிக்கி பாண்டிங் தலைமையில் இருந்த ஆஸ்திரேலியா அணிகள் மிகச் சிறந்த அணிகளாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கேப்டனாக ரிக்கி பாண்டிங் செய்துள்ள ஒரு மாபெரும் சாதனையை உடைக்க ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு அமைந்திருக்கிறது.
2000ஆம் ஆண்டு காலகட்டத்தில் உலக கிரிக்கெட்டில் யாராலும் வெல்ல முடியாத அணியாக ரிக்கி பாண்டிங் தலைமையில் ஆஸ்திரேலியா அணி வலம் வந்தது. ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாடுவதை வழக்கமாகக் கொண்டு இருந்த அந்த ஆஸ்திரேலிய அணி திறமையிலும் யாராலும் நெருங்க முடியாத உயரத்தில் இருந்தது.
இந்த நிலையில் 2003 மற்றும் 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை ஆஸ்திரேலிய அணி ரிக்கி பாண்டிங் தலைமையில் வென்றது. அதே சமயத்தில் 1999 ஆம் ஆண்டு நடந்த ஒரு நாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரையும் ஆஸ்திரேலியா அணியே ஸ்டீவ் வாக் தலைமையில் வென்றிருந்தது.
இந்தக் காலகட்டத்தில் கேப்டனாக ரிக்கி பாண்டிங் மிகக் குறைந்த போட்டிகளில் 100 வெற்றிகளை பெற்றவர் என்கின்ற மாபெரும் சாதனையை படைத்திருந்தார். உலக கிரிக்கெட்டில் இந்த சாதனையை உடைப்பதற்கு அருகில் கூட இதுவரை யாரும் வந்தது கிடையாது. இந்த நிலையில் ரோகித் சர்மா அருகில் வந்தது மட்டும் இல்லாமல் அதை உடைப்பதற்கு அதிகபட்ச வாய்ப்பிலும் கேப்டனாக இருக்கிறார்.
ரிக்கி பாண்டிங் சர்வதேச கிரிக்கெட்டில் 137 போட்டிகளில் முதல் நூறு வெற்றிகளை பெற்ற கேப்டனாக சாதனை படைத்திருக்கிறார். தற்போது ரோகித் சர்மா 122 போட்டிகளில் 93 வெற்றிகள் பெற்றிருக்கிறார். இன்னும் 14 போட்டிகளில் 7 வெற்றிகளை ரோஹித் சர்மா பெரும்பொழுது ரிக்கி பாண்டிங் மாபெரும் உலக சாதனையை உடைத்து புதிய சாதனையை படைப்பார். மேலும் ரிக்கி பாண்டிங் 62 போட்டிகளில் அதிவேகமாக 50 சர்வதேச வெற்றிகள் பெற்றிருந்தார். இதை ரோகித் சர்மா 61 போட்டியில் செய்து ஏற்கனவே இதில் உலக சாதனை படைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கம்பீர பத்தி தப்பா நினைச்சு இருக்கிங்க.. டிரெஸ்ஸிங் ரூம்ல அவர் இப்படித்தான் இருக்காரு – ரோகித் சர்மா விளக்கம்
மேலும் தற்போது இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் விளையாடுகிறது, இதற்கு அடுத்து பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இருக்கிறது. மேலும் அடுத்து உள்நாட்டிலேயே நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இருக்கிறது. எனவே இந்த மூன்று தொடர்களிலுமே ரிக்கி பாண்டிங் உலக சாதனையை முறியடித்து விட ரோகித் சர்மாவுக்கு மாபெரும் வாய்ப்பு அமைந்திருக்கிறது!






