இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா இளம் வீரர் திலக் வர்மா பெரிய போட்டிகளுக்கான வீரர் என பாராட்டி பேசி இருக்கிறார்.
தற்போது திலக் வர்மா காயம் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம் பெறவில்லை. அவர் உலகக் கோப்பைக்கு முன்பான பயிற்சி ஆட்டங்களில் அணி உடன் உடல் தகுதி பெற்று இணைந்து விடுவார் என்று கூறப்பட்டிருக்கிறது.
ஏதோ வித்தியாசமாக இருந்தது
இதுகுறித்து ரோஹித் சர்மா பேசும்பொழுது “திலக் வர்மா முதன் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் நுழைந்த பொழுது அவரிடம் ஏதோ வித்தியாசமாக இருப்பதை என்னால் உணர முடிந்தது. அவருடனான உரையாடல் எனக்கு நல்ல ஈர்ப்பைக் கொடுத்தது. அந்த உரையாடல்கள் அர்த்தமுள்ளதாகவும் இருந்தது”
“அவர் என்னிடம் பேசும் பொழுதெல்லாம் என்னை பேட்டிங் வரிசையில் கொஞ்சம் மேலே அனுப்புங்கள் என்னால் அந்த வேலையை செய்ய முடியும் என்றுதான் சொல்லிக் கொண்டே இருப்பார். நான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டு சீசன்கள் பற்றி சொல்கிறேன்”
அவர் பிக் மேட்ச் பிளேயர்
“அவருக்கு அந்த மனநிலையும் அணுகுமுறையும் இருக்கிறது. அது மிகவும் சிறந்தது. அவருக்கு கிரிக்கெட் மீது பைத்தியம். முக்கியமாக ஆசியக் கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் வெளிப்படுத்திய அணுகுமுறை அபாரமாக இருந்தது. ஒருபுறம் விக்கெட் விழுந்து கொண்டே இருக்க பெரிய கூட்டத்திற்கு முன்பாக மிகச் சிறப்பாக செயல்பட்டார்”
இதையும் படிங்க: யுவராஜ் சிங் அபிஷேக் சர்மா கிட்ட இதத்தான் சொல்லி இருப்பார்.. அதுதான் கலக்கலுக்கு காரணம் – பத்ரிநாத் தகவல்
“இது ஆரம்ப நாட்கள்தான். ஆனால் அவர் பெரிய போட்டிகளுக்கான வீரர் என்று காட்டுகிறார். அணி சிக்கலில் இருக்கும் போது ஒரு முறை அல்ல சில முறைக்கு மேல் அவர் மீட்டுக் கொண்டு வந்திருக்கிறார்” என்று கூறி இருக்கிறார்.






