கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

ரோகித் சர்மா 2 உலக சாதனைகள் 1 இந்திய சாதனை.. அதிரடி சதம் அசத்தல் பேட்டிங்.. இந்தியா ரன்கள் குவிப்பு

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே மூன்றாவது டி20 போட்டி இன்று நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வது என்கின்ற முடிவுக்கு வந்தார். ஆனால் வழக்கமான பெங்களூர் ஆடுகளம் போல் பேட்டிங் செய்ய சாதகமாக இல்லாமல் கடினமான ஆடுகளம் கொடுக்கப்பட்டு இருந்தது.

இதன் காரணமாக ஜெய்ஸ்வால் 4, சிவம் துபே 1 என வெளியேறி அதிர்ச்சி கொடுக்க, விராட் கோலி மற்றும் சஞ்சு சாம்சன் இருவரும் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அடித்து அதைவிட பெரிய அதிர்ச்சி கொடுத்தார்கள்.

இந்த நிலையில் நெருக்கடியான நேரத்தில் ரோகித் சர்மா மற்றும் ரிங்கு சிங் இருவரும் இணைந்து அணியை கொஞ்சம் கொஞ்சமாக மீட்டெடுக்க ஆரம்பித்தார்கள். அதே சமயத்தில் அவர்கள் அதிரடி காட்டுவதற்கு தயங்கவே இல்லை.

- Advertisement -

முதல் இரண்டு போட்டிகளில் ரன் ஏதும் இல்லாமல் ஏமாற்றமாய் வெளியேறி இருந்த இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இந்த முறை அதற்கு வட்டியும் முதலுமாக சேர்த்து சிறப்பான முறையில் பேட்டிங் செய்தார்.

அவருடைய வழக்கமான ஷாட்கள் வந்தது மட்டும் இல்லாமல், மேக்ஸ்வெல் போல சுவிட்ச் ஹிட் மற்றும் ரிவர்ஸ் ஸ்வீப் என ஆரம்ப காலக்கட்ட ரோஹித் சர்மாவை கண் முன் கொண்டு வந்து காட்டினார். மேலும் அரை சதத்தையும் கடந்தார்.

இதன் மூலம் அவர் இந்திய டி20 கேப்டன்களில் அதிக ரன்கள் குவித்தவர் என்கின்ற சாதனைக்கு சொந்தக்காரரானர். ரோகித் சர்மா இந்திய அணிக்கு டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக 1573 ரன்கள், விராட் கோலி 1570 ரன்கள், தோனி 1112 ரன்கள் எடுத்திருக்கிறார்கள்.

இதற்கு அடுத்து சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்கின்ற உலக சாதனையையும் படைத்திருக்கிறார். நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் 161 சிக்ஸர்கள் அடித்திருக்க, ரோகித் சர்மா அதை தாண்டி 162 சிக்ஸர்களை பதிவு செய்தார். மூன்றாவது இடத்தில் அதிக தூரத்தில் அயர்லாந்தின் பால் ஸ்டெர்லிங் 122 சிக்ஸர்கள் உடன் இருக்கிறார்.

தொடர்ந்து களத்தில் நின்று மேலும் சிறப்பாக விளையாடிய ரோஹித் சர்மா 64 பந்துகளில் பத்து பவுண்டரி மற்றும் 6 சித்தர்களுடன் தனது ஐந்தாவது சர்வதேச டி20 சதத்தை அடித்தார். கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 69 பந்துகளில் 11 பவுண்டரிகள் 8 சிக்ஸர்களுடன் 121 ரன்கள் குவித்தார். இவருடன் இணைந்து நின்ற ரிங்கு சிங் 39 பந்துகளில் இரண்டு பவுண்டரி ஆறு சிக்ஸர்கள் உடன் ஆட்டம் இழக்காமல் 69 ரன்கள் எடுத்தார். இந்திய அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.

ரோகித் சர்மா இந்த சதத்தின் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஐந்து சதங்கள் அடித்து அதிக சதம் அடித்தவர் என்கின்ற உலக சாதனையைப் படைத்திருக்கிறார். ஒட்டுமொத்தமாக இன்றைய போட்டியில் இரண்டு உலகச்சாதனைகள் மற்றும் ஒரு இந்தியச் சாதனையை கொண்டு வந்திருக்கிறார்.

Published by