தற்போது ஐபிஎல் அணிகளில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ரசிகர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொள்வது தமக்கு மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக இரண்டு அணிகளுக்காகவும் விளையாடியிருக்கும் ராபின் உத்தப்பா கூறி இருக்கிறார்.
பொதுவாக ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே ஆர்சிபி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்களுக்கு இடையே மோதல் போக்கு காணப்படும். இந்த நிலையில் கடந்த ஆண்டு முதல் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி ரசிகர்களுக்கு இடையே மோதல் போக்கு மிகவும் அதிகமாக சமூக வலைதளம் மற்றும் வெளியில் காணப்படுகிறது.
கடந்த ஆண்டு சம்பவம்
கடந்த ஆண்டு ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதிக்கொண்ட கடைசி போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்கின்ற நிலை காணப்பட்டது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் கடைசி ஓவரில் தோனி ஆட்டம் இழக்க சிஎஸ்கே அணி தோல்வி அடைந்து வெளியேறியது.
இந்த போட்டியை வென்றதும் ஆர்சிபி வீரர்கள் சிஎஸ்கே வீரர்களுடன் கைகுலுக்கு வராமல் நீண்ட நேரம் மைதானத்தில் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் தோனி காத்திருந்து விட்டு வெளியேறிவிட்டார். இதுவெல்லாம் சேர்ந்து இரு அணி ரசிகர்களுக்கும் இடையே பகைமையை தூண்டி இருந்தது. இந்த நிலையில் இரண்டு ஆண்டுகள் சிஎஸ்கே அணி தடை செய்யப்பட்டதை குறிக்கும் வகையில் டீசர்ட் அடித்து ஆர்சிபி ரசிகர்கள் மோதலை உச்சத்துக்கு இந்த ஆண்டு எடுத்துச் சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது மிகவும் கவலையாக இருக்கிறது
இது குறித்து ராபின் உத்தப்பா பேசும்பொழுது ” தற்போது இது மிகவும் முக்கியமாக மாறி இருக்கிறது. அணி வீரர்கள் பேருந்தில் ஏறி கிளம்பும் பொழுது கடுமையான முறையில் ரசிகர்களால் கேலி செய்யப்படுவதை நான் பார்த்தேன். நான் பார்த்த இன்னொரு விஷயம் ரசிகர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிடுவது. இது பெண் ரசிகைகள் பயப்படும் படியாக அமைந்திருந்தது. கடந்த சென்னையில் கூட இப்படியான விஷயங்கள் நடைபெற்றது”
இதையும் படிங்க : பாபர் அசாம் தேர்ந்தெடுத்த உலக டி20 அணி.. விராட் பும்ராவுக்கு நடந்த காமெடி.. இந்திய ரசிகர்கள் கோபம்
“இது மேலும் தீவிரமாகி, சிஎஸ்கே இரண்டு வருடங்கள் தடை செய்யப்பட்டதை குறிக்கும் வகையில், வெள்ளை ஜெர்சியில் கருப்பு கோடுகள் போட்ட டீ ஷர்ட்டுகள் விற்கப்பட்டன. அதில் எம்எஸ் என்று எழுதப்பட்டும், மேலும் அவருடைய ஜெர்சி எண் குறிக்கப்பட்டும் இருந்தது. இது எனக்கு மிகவும் கவலை அளிக்கிறது. ஏனென்றால் நாள் முடிவில் இது வெறும் விளையாட்டு மட்டுமே” என்று கூறி இருக்கிறார்.






