இந்திய அணியின் இளம் ரியான் பராக் ரன் எடுக்க முடியாத காரணத்தினால் குளியல் அறையில் தான் அழுததாக தெரிவித்திருக்கிறார்.
தற்போது தோள்பட்டை காயத்தின் காரணமாக அவர் இந்திய அணியில் இடம் பெற முடியாமல் போனது. இந்த நிலையில் அவர் தற்போது சையத் முஸ்தாக் அலி தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறார். மேலும் இந்திய அணியில் ஆப் ஸ்பின் பேட்டிங் ஆல் ரவுண்டர் இடத்திற்கு அவருக்கு வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது.
எப்படி வேணா நினைச்சுக்கோங்க
இது குறித்து ரியான் பராக் பேசும் பொழுது ” நான் இந்திய அணியில் விளையாடுவதற்கு மிகவும் தகுதியானவன் என்று உணர்ந்தேன். இது எனது நம்பிக்கை அல்லது அதீத நம்பிக்கை என்று நீங்கள் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளலாம். தற்போது தோள்பட்டை காயத்தின் காரணமாகவே நான் இந்திய அணியில் விளையாடவில்லை என்று எனக்குத் தெரியும். நான் முழு உடல் தகுதி பெற்றிருக்கும் பொழுது நீங்கள் என்னை இரண்டு வெள்ளைப் பந்து அணிகளிலும் பார்க்கலாம்”
“நான் இந்த கட்டங்களை என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய கடந்து வந்திருக்கிறேன். ஐபிஎல் தொடரில் முதல் மூன்று, நான்கு ஆண்டுகள் நான் மிகவும் கடினமாக போராடி இருக்கிறேன். நான் இப்பொழுது ஒரு காயத்தில் இருந்து மீண்டு வந்திருக்கிறேன். எனவே இந்த விஷயத்தில் நான் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும்”
பாத்ரூமில் அழுதேன்
“நான் இரண்டு சையத் முஸ்தாக் அலி தொடர்களில் ஏழு போட்டிகளில் சராசரியாக 40-45 ரன்கள் எடுத்தேன். அதற்குப் பின்னர் நான் ஐபிஎல் தொடரில் 14 போட்டிகள் விளையாடி மொத்தமாக 70 ரன்கள் கூட எடுக்க முடியாமல் தடுமாறினேன். என்னால் ரன்கள் எடுக்க முடியாததால் பாத்ரூமில் அழுது இருக்கிறேன். நான் பயிற்சி செய்ய வேண்டுமா அல்லது பயிற்சி தேவை இல்லையா? விடுமுறைக்கு சென்று விடலாமா? என்றெல்லாம் யோசித்திருக்கிறேன்”
இதையும் படிங்க : வாஷிங்டன் சுந்தர் அஸ்வின்ல பாதி கூட கிடையாது.. அவர கேப்டன்களே நம்பறது இல்ல – முகமது கைஃப் பேச்சு
“தற்போது நான் விளையாடிக் கொண்டிருக்கும் இந்த சையத் முஸ்தாக் அலி தொடர் என்னுடைய மசல் மெமரிக்கானது. நான் இந்த தொடரில் ரன்கள் எடுக்கவில்லை என்றால் ஐபிஎல் தொடரில் ரன்கள் எடுக்க மாட்டேன் என்று கிடையாது. ஏனென்றால் இதற்கு முன்பு இந்த தொடரில் ரன்கள் எடுத்துவிட்டு ஐபிஎல் தொடரில் ரன்கள் எடுக்காமலும் போயிருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.






