இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்திற்கு மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்க ரோகித் சர்மா தலைமையில் சென்றுள்ளது. இதில் முதலில் நடந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக கேப்டன் ரோகித் சர்மா கோவிட் தொற்றால் பாதிக்கப்பட, அவரைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரீட் பும்ரா பர்மிங்காம் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டிக்குத் தலைமைத் தாங்கினார்.
இந்த டெஸ்ட் போட்டி 2021-23 டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான போட்டி என்பதோடு, ஏற்கனவே கோவிட்டால் இங்கிலாந்தில் தவறவிட்ட ஒரு டெஸ்ட் போட்டியாகும். இந்தத் தொடரில் இந்திய அணி முன்பு 2-1 என முன்னிலையில் இருந்ததால், இந்தப் போட்டியில் வென்றாலோ, டிரா செய்தாலோ தொடரை வெல்லும், மேலும் டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிபோட்டிக்குத் தகுதி பெறுவதற்கும் உதவும் என்பதால், இந்தப் போட்டிக்கு இந்திய கிரிக்கெட் இரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் முதல் மூன்று நாட்கள் சிறப்பாக விளையாடிய இந்திய அணி, கடைசி இருநாட்களில் மிக மோசமாக விளையாடி தோற்றது. முதல் இன்னிங்சில் முக்கிய ஐந்து விக்கெட்டுகளை 98 ரன்களுக்குள் இந்திய அணி இழந்தாலும், ரிஷாப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் 222 ரன்கள் குவித்ததோடு இருவரும் சதம் அடித்து அசத்தி, இந்திய அணி 416 ரன்கள் குவிக்க காரணமாக இருந்தனர். இதற்கடுத்து விளையாடிய இங்கிலாந்து அணியையும் 284 ரன்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் சுருட்டினர். ஆனால் அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 245 ரன்களுக்கு சுருண்டதோடு, 378 ரன் இலக்கிருந்தும் அதற்குள் இங்கிலாந்து அணியை மடக்க முடியாமல், ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்றுத் தோல்வியைத் தழுவினர்.
இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் சார்பில், இங்கிலாந்தின் தட்டையான ஆடுகளத்தில் சிறப்பாக விளையாடிய பேட்ஸ்மேன்கள் ரிஷாப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜாதான். ரிஷாப் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்ததோடு, இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்தார். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் பெரியளவில் விளையாடவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் அரைசதம் அடித்த புஜாராவும் மந்தமாகவே விளையாடினார். விராட் கோலி இரண்டு இன்னிங்சிலும் இருபது ரன்களை தாண்டவில்லை. முதல் இன்னிங்ஸில் வெளியில் சென்ற பந்தை ஆடுவதா வேண்டாமா என்ற குழப்பத்தில் ஆடி ஆட்டமிழந்தார்.
தற்போது இந்த டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, ஐ.சி.சி டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. இரண்டு இன்னிங்ஸில் சதம் மற்றும் அரைசதம் ரிஷாப் பண்ட் 801 புள்ளிகளைப் பெற்று, ஐந்தாம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் மேலே இருப்பது ரிஷாப் பண்ட்தான். ஆனால் இன்னொருபுறம் பெரிய அதிர்ச்சியாக, இரண்டு இன்னிங்ஸிலும் இருபது ரன்களை தாண்டாத விராட் கோலி 2053 நாட்களுக்குப் பிறகு, முதன் முறையாக, டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான ஐ.சி.சி தரவரிசை பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் இருந்து வெளியேறி இருக்கிறார். 2019ஆம் ஆண்டிற்குப் பிறகு சரிய ஆரம்பித்த விராட் கோலியின் பேட்டிங் பார்ம் இறங்கு முகத்திலேயே தொடர்ந்து இருப்பது இந்திய கிரிக்கெட் வட்டாரங்களை கவலையிலேயே வைத்திருக்கிறது!