இந்திய அணி பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஐசிசி சாம்பியன் டிராபி தொடரில் வென்றது குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய வீரர் ஒருவரை மிகவும் புகழ்ந்து பேசி இருக்கிறார்.
நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பாகிஸ்தான் அணியின் மந்தமான பேட்டிங் மற்றும் விராட் கோலியின் அற்புதமான சதம் இந்த போட்டியை ஒருதலைப் பட்சமாக இந்தியா பக்கம் மாற்றி விட்டது.
எனக்கு அதில் ஆச்சரியம் இல்லை
இதுகுறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “பெரிய போட்டிகளுக்கு சமமான பெரிய வீரர்கள் வேண்டும் என்பது குறித்து நான் எப்போதும் சொல்லி வருகிறேன். அந்த நேரத்தில் எழுந்து நிற்க ஒரு பெரிய வீரர் தேவை. இந்திய அணிக்கு பாகிஸ்தான் போட்டியை விட பெரிதாக எதுவும் இல்லை. சர்வதேச பெரிய போட்டிகளில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை பொறுத்து உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். எனவே விராட் கோலி மீண்டும் சிறப்பாக விளையாடியதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை”
“நேற்று ஒரு டிரிக்கியான விக்கெட்டில் பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்ததை விட அவர்களுக்கு சாதகமான விஷயம் எதுவும் கிடையாது. எனவே அந்தப் போட்டியை வெல்வதற்கு மேல் வரிசையில் சிறப்பாக விளையாட ஒருவர் இந்திய அணிக்கு தேவைப்பட்டார். மீண்டும் விராட் கோலிதான் அந்த வேலையை செய்து முடித்தார்”
விராட் கோலி போல பார்த்தது இல்லை
“விராட் கோலி வெளிப்படையாக நீண்ட காலமாக கிரிக்கெட்டில் சாம்பியன் வீரராக இருந்து வந்திருக்கிறார். மேலும் அவர் குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில் தலைசிறந்த வீரராக இருக்கிறார். பாகிஸ்தான் போட்டியில் ஸ்கோர் கார்டை எடுத்துப் பாருங்கள். விராட் சதம் அடித்திருக்கிறார். ஆனால் பாகிஸ்தான் பக்கம் யாரும் பெரிய ரன் எடுக்கவில்லை”
இதையும் படிங்க : 29 வருடத்துக்கு பின் கிடைச்ச வாய்ப்பு .. வெறும் 5 நாள்ல வீணா போகணுமா.. சோகத்தில் பாக் கிரிக்கெட்.. முழு விபரம்
“விராட் கோலியை தாண்டி 50 ஓவர் கிரிக்கெட்டில் நான் சிறந்த வீரரை பார்க்கவில்லை. தற்போது இந்த வடிவத்தில் ரன்கள் குவித்ததில் அவர் என்னையும் தாண்டி இன்னும் இருவரையும் தாண்டி மேலே சென்று விட்டார். அவர் இந்த விளையாட்டில் அதிக ரன் குவித்தவர் ஆக நினைவில் இருப்பார் என்று நான் நினைக்கிறேன்” என தெரிவித்திருக்கிறார்.






