தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியில் கிளன் மேக்ஸ்வெல் மற்றும் லாக்கி பெர்குஷன் இருவரும் காயம் அடைந்து ஐபிஎல் தொடரை விட்டு வெளியேறி விட்டார்கள். ஆனால் இவர்களுக்கு மாற்று வீரர்களை ஏன் கொண்டுவர முடியவில்லை? என ரிக்கி பாண்டிங் காரணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் தலைமைப் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மிகச் சிறப்பாக செயல்பட்டு சிறந்த அணியை உருவாக்கி இருக்கிறார். இதன் காரணமாக அந்த அணி 10 போட்டிகளில் 13 புள்ளிகள் எடுத்து தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
காயமடைந்த முக்கிய வீரர்கள்
பஞ்சாப் கிங்ஸ் அணியில் சில போட்டிகளுக்கு முன்பாக நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் லாக்கி பெர்குஷன் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறினார். மிடில் ஓவர்களில் மிகச் சிறந்த பங்களிப்பை கொடுத்த அவர் இல்லாதது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறி இருக்கிறது.
அதே சமயத்தில் மேக்ஸ்வெல் பேட்டிங்கில் தாக்கத்தை உருவாக்கவில்லை என்றாலும் ஆப் ஸ்பின்னர் ஆக சிறப்பான தாக்கத்தை பஞ்சாப் அணிக்கு கொடுத்து வந்தார். நேற்று விரல் முறிவு காரணமாக அவர் விளையாடாததோடு ஐபிஎல் தொடரில் இருந்தும் வெளியேறி இருக்கிறார். இதுவும் மிகப்பெரிய அளவில் அந்த அணியை நேற்றைய போட்டியிலேயே பாதித்திருக்கிறது. எனவே இந்த இரண்டு வீரர்களுக்கும் உடனடியாக மாற்று வீரர்களை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் பஞ்சாப் கிங்ஸ் நிர்வாகம் இருக்கிறது.
பாகிஸ்தான்தான் காரணம்
இதுகுறித்து பேசி இருக்கும் ரிக்கி பாண்டிங் கூறும் பொழுது ” எங்கள் அணிக்கு தேவையான மாற்று வீரர்களை கண்டறிய நாங்கள் முயற்சிகள் செய்து வருகிறோம். எப்படியும் நாங்கள் இரண்டு மாற்று வீரர்களுக்கு கையெழுத்திடுவோம். தற்போது எங்கள் அணியின் வேகப்பந்துவீச்சு ஆல் ரவுண்டர்கள் அஸமத்துல்லா ஓமர்சாய் மற்றும் ஆரோன் ஹார்டி இருவரும் முக்கியமானவர்களாக மாறி இருக்கிறார்கள். அடுத்து எங்களுக்கு போட்டிகள் இமாச்சல் பிரதேஷ் தரம்சாலாவில் இருப்பதால், அங்கு நல்ல ஸ்விங் மற்றும் பவுன்ஸ் கிடைக்கும் என்பதால் இவர்கள் மிக முக்கியமானவர்களாக இருக்கிறார்கள்”
இதையும் படிங்க : நான் சொல்றேன்.. கில்கிறிஸ்ட் பேச்சை தோனி கேட்க மாட்டார்.. இதை விடவும் மாட்டார் – ஆரோன் பின்ச் பேட்டி
“மேலும் தற்போது பாகிஸ்தானில் பிஎஸ்எல் தொடர் நடைபெற்று வருவதால், தரமான வீரர்கள் அங்கு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எனவே எங்களால் நல்ல மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்ய முடியவில்லை. மேலும் நாங்கள் சில இந்திய இளம் வீரர்களையும் எங்களுடன் இணைத்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் அவர்களுடனே தொடர்ந்து சென்றாலும் செல்லலாம். இல்லையென்றால் எங்களது பன்னிரண்டாவது போட்டிக்குப் பிறகு நாங்கள் நிச்சயம் இரண்டு மாற்று வீரர்களை கொண்டு வருவோம்” என்று கூறி இருக்கிறார்.






