இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் ரன் ஏதும் இல்லாமல் ஆட்டம் இழந்ததற்கு பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் கில் இருவருமே காரணம் என ரிக்கி பாண்டிங் விமர்சனம் செய்திருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட சாய் சுதர்சன் அடுத்த இரண்டு போட்டிகளுக்கு நீக்கப்பட்டார். இதைத் தொடர்பு நான்காவது போட்டியில் மீண்டும் வாய்ப்பு பெற்ற அவர் முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்து, இரண்டாவது இன்னிங்ஸில் கோல்டன் டக் ஆனார்.
இந்திய டெஸ்ட் அணியில் புஜாரா சேர்க்கப்படாததை அடுத்து மூன்றாவது இடத்திற்கு சரியான வீரரை கண்டுபிடிக்க வேண்டிய தேவை இந்திய கிரிக்கெட் நிர்வாகத்திற்கு இருந்து. இந்த நிலையில் சிறிது காலம் கில் அந்த இடத்தில் விளையாடி வந்தார். இதற்கு அடுத்து சாய் சுதர்சனுக்கு அந்த இடம் கொடுக்கப்பட்டு உடனடியாக பறிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இரண்டு போட்டிகள் கருண் நாயருக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டது. மீண்டும் அவரை நீக்கிவிட்டு சாய் சுதர்சனை அந்த இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்கள். முக்கியமான இடத்திற்கு ஒரு வீரரை நிரந்தரமாக கொண்டு வருவதற்கான நம்பிக்கையை இந்திய அணி நிர்வாகம் கொடுக்காமல் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ரிக்கி பாண்டிங் பேசும்பொழுது “முதல் போட்டியில் வாய்ப்பு கொடுத்து விட்டு பிறகு நீக்கி மீண்டும் வாய்ப்பு கொடுப்பது சாய் சுதர்சன் போன்ற ஒரு வீரருக்கு தேவை இல்லாத உள் அழுத்தத்தை உருவாக்குகிறது. கம்பீர் மற்றும் கில் முதல் டெஸ்டுக்கு சாய் சுதர்சனை கொண்டு வந்தார்கள். ஆனால் உடனே நீக்கி விட்டார்கள். பின்னர் மீண்டும் அவரிடம் இவர்கள் சென்று இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது”
இதையும் படிங்க : இன்று ரிஷப் பண்ட் ஆடுவாரா.. காயத்தோடு தாக்குப் பிடிக்க முடியுமா? – இந்திய பேட்டிங் கோச் வெளிப்படையான பதில்
“உங்களுடைய இளம் வீரருக்கு உங்கள் கேப்டன் மற்றும் பயிற்சியாளரிடமிருந்து கொஞ்சம் ஆதரவு உறுதியும் தேவை. நாங்கள் உனக்கு ஒரு நீண்ட வாய்ப்பை தரப் போகிறோம், அதில் நீ என்ன செய்கிறாய் என்று பார்ப்போம் என்று நம்பிக்கையை கொடுக்க வேண்டும். என்னை பொறுத்தவரையில் சாய் சுதர்சன் நிச்சயம் சிறப்பாக செயல்படுவார். அவருடைய திறமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.