இங்கிலாந்தில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி முழுமையாக தோற்றால் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு பெரிய நல்ல சம்பவம் நடைபெறும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் தெரிவித்திருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இந்த மாதம் ஜூன் 20ஆம் தேதி முதல் ஐந்து போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் ஆரம்பிக்க இருக்கிறது. இங்கிலாந்து அணி முதல் முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற ஆரம்பம் முதல் விழிப்புணர்வோடு விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணி இளமையாக இருப்பதால் கடுமையாக போராடலாம் என்று கூறப்படுகிறது.
இந்திய அணியின் பலவீனம்
தற்போது இந்திய அணியின் பெரிய பலவீனமாக இருப்பது பேட்டிங் துறைதான். ஏனென்றால் கடந்த மாதத்தில் அனுபவ வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துவிட்டார்கள். இதன் காரணமாக தற்பொழுது வெளிநாட்டு மண்ணில் சாதித்தவராக ரிஷப் பண்ட் மற்றும் கே எல் ராகுல் இருவர் மட்டுமே பேட்டிங் யூனிட்டில் இருக்கிறார்கள்.
இதைத்தொடர்ந்து கேப்டன் கில், ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் மற்றும் கருண் நாயர் என எல்லோருக்குமே சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் அனுபவமும் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அனுபவமும் மிகவும் குறைவாக இருப்பது அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விராட் கோலி மீண்டும் இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பி வரவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா முழுமையாக தோற்க வேண்டும்
இதுகுறித்து மைக்கேல் கிளார்க் பேசும் பொழுது ” இந்தியா இங்கிலாந்து சென்று சவுக்கடி வாங்கினால் அதாவது ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக தோற்றால், இந்திய ரசிகர்கள் விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வர வேண்டும் என்று விரும்புவார்கள். இதை நான் மிகவும் உறுதியாக நம்புகிறேன்”
இதையும் படிங்க : நடராஜனை ஐபிஎல் தொடரில் ஆட வைக்காத காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த ஹேமங் பதானி – நடந்தது என்ன?
“நான் சொன்னது போல இங்கிலாந்தில் இந்திய அணி பெரிய அளவில் தோற்கடிக்கப்பட்டால், கேப்டன், தேர்வாளர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் அவரை திரும்பி வரும்படி கேட்டால், நிச்சயம் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பி வந்துவிடுவார். ஏனென்றால் டெஸ்ட் கிரிக்கெட் குறித்து அவர் பேசி இருக்கும் வார்த்தைகள் அவ்வளவு நேசிப்பையும் ஈடுபாட்டையும் காட்டுகிறது. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டை இப்பொழுதும் மிகவும் விரும்புகிறார்” என்று கூறி இருக்கிறார்.






