தற்போது இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபிக்கான பயிற்சியில் ஈடுபட்டு கொண்டு வருகிறது. இதில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஒருவர் காயமடைந்து இருப்பதாக தற்பொழுது செய்திகள் தெரிவிக்கிறது.
2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் தனது முதல் போட்டியில் இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக வருகின்ற 20-ஆம் தேதி துபாய் இன்டர்நேஷனல் மைதானத்தில் மோத இருக்கிறது. தற்பொழுது இதற்காக இந்திய அணி துபாயில் முகாமிட்டு பயிற்சிகள் செய்து கொண்டு வருகிறது.
சாம்பியன்ஸ் டிராபி இந்திய அணி அறிவிப்பில் இடதுகை விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டை இந்திய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் முதன்மை விக்கெட் கீப்பர் என்று அறிவித்திருந்தார். அதே சமயத்தில் இரண்டாவது விக்கெட் கீப்பரான கேஎல்.ராகுலுக்கு தொடர்ந்து மூன்று போட்டிகளும் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் வழங்கப்பட்டது.
இந்திய தேர்வுக்குழு தேர்வு செய்த முதன்மை விக்கெட் கீப்பருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. மேலும் அணி தேர்வின் போது இது குறித்து விவாதங்கள் கம்பீர் மற்றும் அகர்கருக்கு இடையே பெரிய அளவில் சென்றதாகவும் பேசப்பட்டு கொண்டு வருகிறது. இந்த நிலையில் பயிற்சியிலும் ரிஷப் பண்ட் முக்கியமான விஷயமாக தற்பொழுது மாறியிருக்கிறார்.
இன்று இந்திய அணியின் பயிற்சியில் ஹர்திக் பாண்டியா அடித்த பந்து ஒன்று நேராக ரிஷப் பண்ட் வலது கால் முட்டியை தாக்கியது. ஏற்கனவே சாலை விபத்தில் சிக்கிய அவருக்கு இந்தக் காலில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அடிபட்ட ரிஷப் பண்ட் உடனடியாக சுருண்டு கீழே விழுந்தார். அவருக்கு அங்கேயே வைத்து உடனடியாக முதல் உதவி மருத்துவம் பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க : பாகிஸ்தான் அணியை ஒன் சைடா ஜெயிப்போம்.. நீங்க அவங்க கிட்டயே இதை கேட்டுப் பாருங்க – ஹர்பஜன் சிங் கருத்து
இந்த நிலையில் பந்தை அடித்த ஹர்திக் பாண்டியா உடனே ஓடி சென்று என்ன நடந்தது? என்று பார்த்தார். பிறகு அவருக்கு வலது கால் முட்டியில் ஐஸ் வைக்கப்பட்டு, பிறகு அங்க பெரிய ஸ்ட்ராப் சுற்றப்பட்டது. பின்பு நேரம் ஆக ஆக ரிஷப் பண்ட் தமக்கு எந்தவித பிரச்சனையும் இல்லை என்று கூறி பயிற்சியை தொடரவே இந்திய முகாம் நிம்மதி அடைந்தது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் பேக்கப்பாக மட்டும் இல்லாமல், பேட்டிங் யூனிட்டின் பேக்கப் பேட்ஸ்மேன் ஆகவும் இருப்பதால் அவருடைய தேவை மிகவும் முக்கியமானதாக இருக்கிறது!