தற்போது டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு எதிராக விளையாட பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய நிபந்தனைகளை தொடர்ந்து விதித்து கொண்டே வருவதாக செய்திகள் தெரிவிக்கிறது.
நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் வருகின்ற பிப்ரவரி 15ஆம் தேதி இலங்கை கொழும்பு மைதானத்தில் மோதிக் கொள்வதாக அட்டவணை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த வாரத்தில் இந்திய அணிக்கு எதிராக விளையாட முடியாது என பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஐசிசி முயற்சி
பாகிஸ்தான் அரசாங்கத்தின் இந்த முடிவால் உலகக் கோப்பை தொடரில் பெரிய அளவில் நஷ்டம் ஏற்படுகின்ற வாய்ப்பு இருப்பதால் ஐசிசி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. மேலும் இலங்கை கிரிக்கெட் வாரியமும் பாகிஸ்தானை இந்திய அணிக்கு எதிராக விளையாடுமாறு வலியுறுத்தி உள்ளது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்தியா பாகிஸ்தான் இருநாட்டு கிரிக்கெட் தொடர்கள், ஐசிசி கொடுக்கும் தொகையை உயர்த்துதல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து பேச்சு வார்த்தைகளை நடத்தியது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் இதற்கு திட்டவட்டமாக மறுத்துவிட்டதாக செய்திகள் கூறுகிறது.
பாகிஸ்தான் புதிய கோரிக்கை
தற்போது இந்த பேச்சுவார்த்தையில் புதிய திருப்பமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஐசிசி அமைப்பிடம் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் மூன்று நாடுகளையும் வைத்து முத்தரப்பு தொடர் ஒன்றை நடத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்து இருப்பதாக செய்திகள் கூறுகிறது. இதற்கு ஐசிசி இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிகிறது.
இதையும் படிங்க : அபிஷேக் பும்ரா இல்லை.. இந்திய அணியில் இவர்கள்தான் அதிக ரன் விக்கெட் எடுப்பார்கள்.. பைனல் இந்த டீம்தான் – பர்னல் கணிப்பு
அதே சமயத்தில் இந்திய கிரிக்கெட் வாரியம் இதற்கு நிச்சயமாக சம்மதிக்காது என கிரிக்கெட் வட்டாரத்தில் கூறுகிறார்கள். குறிப்பாக பாகிஸ்தான் அணிக்கு எதிராக தனிப்பட்ட தொடர்களில் இந்திய அணி விளையாடாது என்று தெரிகிறது. ஒருவேளை பங்களாதேஷ் அணிக்கு எதிராக மட்டும் விளையாடுவதாக இருந்தால் இந்திய அணி பங்கேற்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.






