கிரிக்கெட்

பாட் கம்மின்ஸ் தனது விரலின் ஒரு பகுதியை இழந்ததற்கான காரணம்

தற்போது உலகின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் முக்கியமானவர் பேட் கம்மின்ஸ். ஆஸ்திரேலிய அணிக்காக ஆடி வரும் இவர், தற்போது நடந்து முடிந்த உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்காக 70 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவருடைய பந்து வீச்சை அடித்தளமாக கொண்டு தான் ஆஸ்திரேலிய அணி ஆஷஸ் தொடரை இங்கிலாந்து நாட்டில் சமன் செய்தது. இது வரை இவர் 34 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 164 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஐந்து முறை ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் பேட் கம்மின்ஸ்.

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு பிரதான பந்து வீச்சாளராக இருக்கும் கம்மின்ஸின் வலது கையின் நடு விரல் சிறிது வெட்டப்பட்டது போல் இருக்கும். இதனால் அவரின் ஆட்காட்டி விரலும் நடு விரலும் ஒரே உயரத்தில் இருக்கும். கம்மின்ஸின் நடுவிரல் இப்படியானதற்கு அவரது சகோதரியே காரணம். சிறு வயதில் தவறுதலாக கம்மின்ஸின் கை விரலை கதவுகளுக்குள் வைத்து பூட்டி விட கதவின் அழுத்தத்தால் அவரது நடு விரலின் ஒரு பகுதி துண்டானது. ஒரு சென்டிமீட்டர் அளவுக்கு அவரது விரல் இதனால் துண்டிக்கப்பட்டது.

பேட் கம்மின்ஸ் இது குறித்து கூறும் போது, “இரண்டு விரல்களும் ஒரே அளவு இருப்பதால் இது எனக்கு பெரிய சிக்கலாக தோன்றவில்லை” என்று கூறினார். அவர் எடுக்கும் விக்கெட்டுகளைப் பார்த்தால் இந்த கை விரல் பிரச்சினையால் அவருக்கு பெரிதும் பாதிப்பு இல்லை என்றே தோன்றுகிறது. மேலும் இது குறித்து அவர் கூறுகையில், “இதைச் செய்ததற்காக இன்னும் என் சகோதரியின் மேல் பொய்யாக கோபம் கொள்வது போல செய்து அவரை அழ வைப்பேன்” என்று கூறினார்.

அதே ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ கூறுகையில், “இப்படிப்பட்ட விரல் அமைப்பு இருப்பதால் அது அவருக்கு நன்மை தான்” என்று கூறியுள்ளார். பந்தைப் பிடித்து வீசுகையில் இந்த விரல் அமைப்பு பந்தை நேர்த்தியாக வீச உதவும் என்று கூறியுள்ளார்.

- Advertisement -

மூன்று வயதில் நடந்த ஒரு வலி மிகுந்த சம்பவம் இன்று பேட் கம்மின்ஸை ஒரு உலகத் தர பந்து வீச்சாளராக மாற்றியது ஆச்சரியமான விசயம். இதே காயம் பட்ட விரல் களுடன் மீண்டும் இங்கிலாந்து அணியை இந்த ஆண்டு இறுதியில் எதிர்கொள்ள இருக்கிறது இந்த காயம் பட்ட சிங்கம்.

Published by