ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 37-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி பதிலடி கொடுத்தது.
நியூ சண்டிகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் பட்டிதார் முதலில் பஞ்சாப் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன்படி இன்னிங்ஸ் தொடங்கிய பிரியன்ஸ் ஆர்யா மற்றும் பிரபு சிம்ரன் சிங் ஜோடி முதல் விக்கெட்டுக்கு நான்கு ஓவர்களில் 42 ரன்கள் குவித்தது. இதில் ஆர்யா 22 ரன்னில் ஆட்டம் இழக்க, அதற்கு பின்னர் களம் இறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் அவசரப்பட்டு 6 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
அதற்குள் மற்றொரு தொடக்க வீரர் பிரப் சிம்ரன் சிங் 17 பந்துகளில் 33 ரன்கள் ஆட்டம் இழக்க, மிடில் வரிசை வீரர் ஜாஸ் இங்கிலீஷ் ஓரளவு தாக்குப் பிடித்து விளையாடினார். அதற்குள் மற்ற வீரர்கள் அவசரப்பட்டு விரைவாக வெளியேற, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் குவித்தது. ஜாஸ் இங்கிலீஷ் 17 பந்துகளில் 29 ரன்கள் குவிக்க, சஷாங்க் சிங் பொறுமையாக விளையாடி 33 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். பின்னர் மேர்கோ ஜான்சன் 20 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழ்நிலையில் வெற்றி இலக்கை நோக்கி பெங்களூர் அணி களம் இறங்க ஆடுகளத்தின் சூழ்நிலையை உணர்ந்து சிறப்பாக விளையாடியது. இதில் தொடக்க வீரர் பில் சால்ட் 1 ரன்னில் ஆட்டம் இழந்து வெளியேற, அதற்கு பின்னர் களமிறங்கிய தேவ்தத் படிக்கல் விராட் கோலியுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி இரண்டாவது விக்கெட்டுக்கு 69 பந்துகளில் 103 ரன்கள் குவித்தது. அதிரடியாக விளையாடிய படிக்கல் 35 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர் என 61 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
இதையும் படிங்க:18 வருடம்.. விராட் கோலி ஐபிஎல் தொடரில் பிரம்மாண்ட சாதனை.. இனி யாருக்கும் வாய்ப்பு இருக்காது
அதற்குப் பிறகு விராட் கோலி உடன் களம் இறங்கிய கேப்டன் பட்டிதார் 13 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து வெளியேற, அதற்குப் பிறகு களம் இறங்கிய ஜித்தேஸ் ஷர்மா சிக்ஸர் அடித்து போட்டியை முடித்தார். இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 18.5 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடிய விராட் கோலி 54 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 73 ரன்கள் குவித்தார். சின்னசாமி மைதானத்தில் பஞ்சாப் அணியுடன் ஏற்பட்ட தோல்விக்கு பெங்களூர் அணி இந்த வெற்றியின் மூலமாக தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. இந்தப் போட்டியின் மூலமாக 67 அரை சதங்கள் அடித்த விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.