டி20 உலகக் கோப்பை 2024

உறுதியான குதிரை போல.. என் கனவு நனவாகி இருக்கிறது.. டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுகிறேன் – ரவீந்திர ஜடேஜா அறிவிப்பு

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற முடிந்திருக்கும் டி20 உலகக்கோப்பை தொடரை நேற்று இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் கைப்பற்றியது. இதன் இறுதிப் போட்டிக்கு பிறகு இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்கள். இந்த நிலையில் ரவீந்திர ஜடேஜாவும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடருக்கு மொத்தம் நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தியது. இதில் ரவீந்திர ஜடேஜாவும் இடம்பெற்றார். மேலும் அவருக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் கடைசிக்கட்டம் பெரிய அளவில் நன்றாக இல்லை.

மேலும் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரிலும் அது எதிரொலித்தது. இங்கிலாந்து அணிக்கு எதிராக அறையறுதியில் மட்டுமே இறுதி நேரத்தில் அவர் குறிப்பிடத்தக்க ரன்களை எடுத்தார். மற்றபடி தொடர் முழுக்க பந்துவீச்சில் அவர் பெரிய அளவில் ஏதும் சாதிக்கவில்லை.

நேற்று இறுதி போட்டியிலும் ஒரு ஓவர் பந்து வீசிய அவர் 12 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ரோகித் சர்மா மேற்கொண்டு அவரை பந்துவீச்சில் பயன்படுத்தவில்லை. ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி என பெரிய வீரர்கள் ஓய்வை அறிவித்தும் ரவீந்திர ஜடேஜா ஓய்வை அறிவிக்காமல் இருந்தது ரசிகர்களிடையே சலசலப்பை உருவாக்கி இருந்தது. தற்பொழுது ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வை அறிவித்திருக்கிறார்.

- Advertisement -

ரவீந்திர ஜடேஜா தன்னுடைய சர்வதேச டி20 கிரிக்கெட் ஓய்வு அறிக்கையில் “நன்றி நிறைந்த இதயத்துடன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன். உறுதியான குதிரையைப் போல் துள்ளிக் குதித்து, எனது நாட்டுக்காக நான் எப்பொழுதும் சிறந்ததைக் கொடுத்து வருகிறேன். இதை நான் மற்ற வடிவங்களிலும் செய்வேன். டி20 உலகக் கோப்பை தொடரை வென்றது ஒரு கனவாகும். எனது டி20 கிரிக்கெட் வாழ்க்கையின் உச்சம், மகிழ்ச்சி மற்றும் ஆதரவுக்கு நன்றி!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதையும் படிங்க : மேட்ச் முடிய 3 பந்துதான் இருக்கு.. ஆனால் டிராவிட் செய்த வேலையை பார்த்திங்களா – அஸ்வின் உருக்கமான பேச்சு

இதைத்தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக தொடர்ந்து விளையாடுவார். மேற்கொண்டு பாகிஸ்தானில் அடுத்த வருடம் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் பங்கேற்பார். ஆனால் 2027 ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இருப்பாரா? என்பது சந்தேகம்தான்.

Published by