இந்திய அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே இந்த அணிக்கு எதிரான டி20 தொடரின் மூன்று போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. தற்போது மொஹாலியில் முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. இந்திய அணியின் சூப்பர் ஸ்டார் பேட்டிங் வீரர் விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி இதுவாகும். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மைதானத்திற்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று முதலில் தெரிவித்து அதன் பின்பு ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ரசிகர்களை இந்த போட்டியை காண அனுமதி தந்துள்ளது பிசிசிஐ. மேலும் கேப்டன் ரோகித் மூன்றுவித கிரிக்கெட்டிலும் கேப்டனாக ஆக்கப்பட்ட பின் அவர் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும். இதனால் ஆரம்ப முதலே இந்த டெஸ்ட் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது.
டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ரோஹித் மற்றும் மயங்க் என இரண்டு துவக்க வீரர்களும் சற்று குறைவான ஸ்கோரில் ஆட்டம் இழந்தாலும் அதன் பின்பு வந்த இந்திய வீரர்கள் மிகவும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 45 ரன்கள் எடுத்தார். விகாரி 58, பண்ட் 96 என்று அசத்த ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. தற்போது ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் இணைந்து விளையாடி வருகின்றனர்.
மேலும் இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் முக்கிய ஆல் ரவுண்டர் ஜடேஜா ஒரு சாதனையை படைத்துள்ளார். கபில் தேவுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் 5000 ரன்கள் மற்றும் 400 விக்கெட்டுகளை எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஜடேஜா. நீண்ட காலமாக இந்திய அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினுடன் நினைவு பல முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வரும் ஜடேஜா தற்போது மேலும் ஒரு சாதனையை இந்த டெஸ்ட் தொடர் மூலம் படைத்துள்ளது ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்திய அணி தற்போது 500 ரன்களை கடந்து விளையாடி வருகிறது. இலங்கை அணியின் சற்று குறைந்த பேட்டிங் வீரர்களால் இவ்வளவு பெரிய ரன்களை எடுக்க முடியாது என்பதால் கிட்டத்தட்ட இப்போதே இந்திய அணி வெற்றி பெற்று விட்டதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.