இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்டர் ரிஷப் பண்ட்டின் அதிரடி ஆட்டம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடாத விதம் குறித்து முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ள காட்டமான கருத்துக்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட் ரன்கள் குவித்த போதிலும், முக்கிய தருணங்களில் அவர் பொறுப்பற்ற முறையில் விக்கெட்டை இழப்பது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
ரிஷப் பண்ட்டின் ஆட்டமுறை குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்போது “ரிஷப் பண்ட் மீது நான் வைத்திருந்த எதிர்பார்ப்பு இதுவரை பூர்த்தியாகவில்லை. போட்டி உங்கள் கையில் இருக்கும்போது தேவையில்லாமல் ரிஸ்க் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பண்ட் அப்படித்தான் விளையாடுவார் என்ற மார்க்கெட்டிங் வரியை இனிமேல் என் முன்னால் பயன்படுத்தாதீர்கள். சிட்னி மற்றும் பிரிஸ்பேனில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் இல்லாமல் அந்த போட்டியை வென்றிருக்க முடியாது. ஒரு டெஸ்ட் போட்டியை ஜெயிக்க 11 வீரர்கள் தேவை, ஆனால் அதை தோற்கடிக்க ஒரே ஒரு முட்டாள்தனமான தருணம் போதும்” என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து பண்ட்டுக்கு சேவாக் மற்றும் கில்கிறிஸ்ட் உடன் ஒப்பீடு செய்யப்படுவது பற்றி பேசும்போது “வீரேந்தர் சேவாக் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரும் அதிரடியாக ஆடியவர்கள்தான். ஆனால் அணி 500 ரன்கள் பின்தங்கியிருக்கும் போது, அவர்கள் இறங்கி வந்து அடித்து விக்கெட்டை பறிக்கொடுக்க மாட்டார்கள். ‘ஒன்ஸ் இன் எ ஜெனரேஷன் பிளேயர்’ என்று பண்ட் ஒருவருக்கு மட்டும் சிறப்பு சலுகை தரக்கூடாது. அப்படி பார்த்தால் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அப்படிப்பட்ட வீரர்தான்” என்று சாடியுள்ளார்.
மேலும் பண்ட் பொறுப்பை உணர வேண்டும் என வலியுறுத்தி அஸ்வின் பேசும்போது “50 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள பண்ட் பொறுப்பை உணர்ந்து ஆட வேண்டும். அணிக்கு எது தேவையோ அதை செய்ய வேண்டும். உண்மையை அவரிடம் சுட்டிக்காட்டினால் மட்டுமே அவர் இந்திய அணியின் அனைத்து வடிவ போட்டிகளிலும் விளையாடும் வீரராக மாறுவார்” என்று கூறி முடிக்கிறார்.