இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த டெஸ்ட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வினை அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில் அஸ்வின் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் மகேந்திர சிங் தோனி குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இந்திய அணியின் முக்கிய வீரர் அஸ்வின்
ரவிச்சந்திரன் அஸ்வினின் அடையாளம் முதன் முதலாக ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து ஆரம்பித்தது. அங்கு அஸ்வினை அடையாளம் கண்ட தோனி அதற்குப் பிறகு இவரை முக்கிய சுழற் பந்து வீச்சாளராக பயன்படுத்த ஆரம்பித்தார். இதன் மூலமாக தனது திறமையை வெளிப்படுத்திய அஸ்வின் இந்திய அணியிலும் அவருக்கு முக்கிய வீரராக மாறும் வாய்ப்பு கிடைத்தது. அதற்குப் பிறகு ஒரு நாள் மற்றும் டி20 என இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட்டார்.
அதற்குப் பிறகு நிரந்தர டெஸ்ட் வீரராக மாறிய ரவிச்சந்திரன் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி சாதனை படைத்தது மட்டுமல்லாமல், 500 டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தி மெகா சாதனை படைத்தார். இந்த சூழ்நிலையில் அஸ்வின் தோனி வெற்றிகரமாக இருப்பதற்கான காரணங்கள் குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார். அதாவது அடிப்படை விஷயங்களை தோனி சரியாக செய்து வருவதாகவும் மற்ற கேப்டன்கள் யாரும் இதை செய்வதில்லை என்று கூறி இருக்கிறார்.
இப்படி செய்தால் தோனிக்கு கோபம் வரும்
இது குறித்து அஸ்வின் கூறும் பொழுது “தோனி குறித்து நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டுமானால், என் மனதில் தோன்றுவது தோனி அடிப்படை விஷயங்களை சரியாக செய்கிறார் என்று நினைக்கிறேன். பெரும்பாலான கேப்டன்கள் அடிப்படை விஷயங்களை சரியாக செய்வதில்லை. இதனால்தான் அவர்களுக்கு கிரிக்கெட் கடினமான விஷயமாக மாறுகிறது. உதாரணமாக தோனி ஒரு பந்துவீச்சாளரிடம் பந்தை கொடுக்கும் போது பீல்டுக்கு தகுந்தவாறு பந்து வீசுமாறு கூறுவார்.
இதையும் படிங்க:முதல் 30 நிமிஷம் முக்கியம்.. பண்ட் இதுக்கு மரியாதை குடுத்தா.. அவர் நினைச்ச மாதிரி ஆட முடியும் – சுனில் கவாஸ்கர் பேட்டி
ஒரு புது பேட்ஸ்மேன் உள்ளே வரும்போது அவருக்கு அடிக்கக் கூடிய வகையில் பந்து வீசினால் அதற்குப் பிறகு அவர் உங்களை ஓவர் வீச அனுமதிக்க மாட்டார். நான் ஒரு ஓவரில் இரண்டு அல்லது மூன்று பவுண்டரிகள் கொடுத்தால் அது பெரிய பிரச்சனை இல்லை. ஒரு புதிய பேட்ஸ்மேனுக்கு கட் அல்லது டிரைவ் அடிக்கக் கூடிய வகையில் பந்து வீசினால் அது அவருக்கு கோபத்தை வரவழைக்கும். அதற்குப் பிறகு என்னை பந்து வீச அனுமதிக்க மாட்டார். இதுதான் கிரிக்கெட்டின் அடிப்படை. பல ஆண்டுகளாக மக்கள் அடிப்படைகளை மறந்து விட்டார்கள் என்று உணர்ந்தேன்” என கூறி இருக்கிறார்.






