இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியின் பார்ம் பற்றி தனக்கு எப்போதும் எந்த கவலையும் இருந்தது இல்லை என இந்திய நட்சத்திர முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியிருக்கிறார்.
மேலும் இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கு முன்பாக ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தக் குறிப்பிட்ட போட்டியில் விராட் கோலியின் போட்டியாக இருக்கலாம் என்று கூறியிருந்தார். அவர் கூறியிருந்தது போலவே விராட் கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து இந்திய அணியை வெல்ல வைத்து ஆட்டநாயகன் விருது வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி குறித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறும் பொழுது “விராட்டின் தரத்தின் மீது எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது. ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஸ்லிப்பில் அவுட் ஆனார் என்பது குறித்து மக்கள் தொடர்ந்து பேசி வந்தார்கள். அந்த விக்கெட்டில் புல் நிறைய இருந்தது. மேலும் அது சிவப்பு பந்து கிரிக்கெட். தற்போது விராட் கோலி ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் இருக்கிறார். மக்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்”
“ஒருவர் ஸ்லிப்பில் அவுட் ஆகிறார். ஒருவர் போல்ட் ஆகிறார். ஒருவர் எல்பிடபிள்யு ஆகிறார். இதைப்போல விராட் கோலி ஸ்லிப்பில் அவுட் ஆனார். சரி இதில் என்ன பெரிதாக இருக்கிறது? நான் இதில் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை”
“விராட் கோலியின் கிளாஸ் எங்கும் செல்லவில்லை. அவருடைய இன்ஜின் ரூம் ஒருநாள் கிரிக்கெட் என்று நான் எப்பொழுதும் சொல்லி வருகிறேன். அவர் இந்த வடிவ கிரிக்கெட் விளையாடுவதில் நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். இது அவருடைய இரண்டாவது வருகையாக இருக்கலாம். தற்போது சதம் அவருடைய நம்பிக்கையை அதிகரிக்கலாம்”
இதையும் படிங்க : இந்திய பி டீம் கூட பாகிஸ்தான தோற்கடிக்கும்.. எனக்கு அந்த ஒரு விஷயம் ஆச்சரியமா இருக்கு – சுனில் கவாஸ்கர் கருத்து
“பாகிஸ்தான் போட்டி விராட் கோலியின் போட்டியாக இருக்கலாம் என்று நான் நினைத்தேன். இது குறித்து நான் கூறியும் இருந்தேன். எதிர்பார்த்தது போலவே விராட் கோலியின் சிறப்பான பேட்டிங் வெளிப்பட்டது. அவர் ஒருநாள் கிரிக்கெட் வடிவத்தில் 14,000 ரன்கள் எட்டினார். மேலும் 51வது சதத்தையும் அடித்தார். மற்ற வீரர்களை விட அவர் 60 முதல் 70 போட்டிகள் குறைவாக விளையாடி இந்த ரன்களை எடுத்து இருக்கிறார். அவரைப் பற்றி நான் இன்னும் என்ன சொல்ல முடியும்? அவர் ஒரு அற்புதமான வீரர்!” என்று கூறியிருக்கிறார்.