இந்திய டெஸ்ட் அணியில் கருண் நாயரை தவறான இடத்தில் விளையாட வைத்து கடைசியில் அவரை நீக்கும் அளவுக்கு மோசமான சூழ்நிலையை இந்திய அணி நிர்வாகம் உருவாக்கி விட்டதாக ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் அதிரடியாக கருண் நாயர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இரண்டாவது வாய்ப்பு பெற்ற தாய் சுதர்சன் நான்காவது டெஸ்டில் அரை சதம் அடித்து நிரூபித்து இருக்கிறார்.
விளையாடிய விதி
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் மூன்றாவது இடத்திலும் கருண் நாயர் ஆறாவது இடத்திலும் விளையாடினார்கள். இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சாய் சுதர்சன் நீக்கப்பட்டு மூன்றாவது இடத்தில் கருண் நாயர் விளையாட வைக்கப்பட்டார்.
அவருக்கு நல்ல துவக்கங்கள் கிடைத்த போதும் அதை பெரிய ஸ்கோராக மாற்ற முடியவில்லை. அவருடைய கால் நகர்வுகள் சரியாக இல்லாத காரணத்தினால் எளிதாக ஆட்டம் இழந்தார். இதனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு சாய் சுதர்சன் கொண்டுவரப்பட்டார்.
கருண் நாயருக்கு செய்தது தவறு
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” கருண் நாயர் ஒருபோதும் மூன்றாவது இடத்தில் விளையாடியது கிடையாது. தற்போது அவரை அந்த இடத்தில் விளையாட வைத்ததால் ஒரு மனத்தடையை உருவாக்கி விட்டார்கள். ஆனால் சாய் சுதர்சனுக்கு அந்த இடம் மிகவும் சரியாக இருக்கிறது. மேலும் ஒரு இளம் வீரராக இந்திய அணி பின்தங்கி இருக்கும் தொடரில், முதல் டெஸ்டில் நீக்கப்பட்ட பிறகு மீண்டும் வந்து அரை சதம் அடித்தது மிகவும் சிறப்பானது. எதிர்காலத்தில் மூன்றாவது இடத்தை அவர் சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க : ரிஷப் பண்ட் செஞ்ச அத பாத்தீங்களா.. இது ரொம்ப மோசமான அறிகுறி.. மாட்டிக்க போறாங்க – ரவி சாஸ்திரி கவலை
“டிராவிட்டும் புஜாராவும் இந்த இடத்தில் பேட்டிங் செய்து காட்டிய உறுதியை சாய் சுதர்சன் காட்டினார். ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு கடினமாக இருந்த போதிலும் அவரது உறுதி சிறப்பாக இருந்தது. பந்துகளை அவர் மிகச் சிறப்பான முறையில் விட்டு விளையாடினார். பேட்டிங் செய்வதற்கு கடினமான நேரத்தை சிறப்பாக கடந்தார். இதனால் அடுத்த ரன் எடுக்கும் வாய்ப்பு அவருக்கு உருவானது. ஒரே வருத்தம் என்னவென்றால் அவர் சதம் அடித்திருக்கலாம்” என்று கூறியிருக்கிறார்.






