ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்று ஆட்டத்தில் சண்டீகர் அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி அபாரமாக வீழ்த்தி அசத்தியிருக்கிறது. குரூப் டி பிரிவில் சேலத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழ்நாடு அணியும், சண்டீகர் அணியும் பலப் பரீட்சை நடத்தியது.
இதில் டாஸ் வென்ற சண்டீகர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய தமிழக அணியில் தொடக்க வீரர் முகமது அலி 40 ரன்களிலும், நாராயண் ஜெகதீசன் 63 ரன்களிலும் ஆட்டம் இழக்க, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சங்கர் ஒரு ரன்னில் திரும்பினார்.
சித்தார்த் அபார சதம்:
பாபா இந்திரஜித் 49 ரன்களில் போல்ட் ஆனார். இந்த சூழலில் 18 வயது வீரரான ஆண்டிரூ சித்தார்த் அபாரமாக விளையாடி 106 ரன்கள் குவித்தார். இதன் மூலம் தமிழக அணி முதல் இன்னிங்சில் 301 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து சண்டீகர் அணி தங்களுடைய முதல் இன்னிங்ஸ் விளையாடுவது தொடக்க வீரர் சிவம் பம்புரி அபாரமாக விளையாடி சதம் எடுக்க மற்ற வீரர்கள் யாரும் அவருக்கு துணை நிற்கவில்லை.
கேப்டன் மனன் வொஹ்ரா 34 ரன்களும், குனல் மகாஜன் 30 ரன்கள் எடுக்க சண்டீகர் அணி முதல் இன்னிங்ஸில் 204 ரன்கள் எடுத்தது. தமிழக பந்துவீச்சு தரப்பில் அஜித் ராம் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். 97 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் தமிழ்நாடு அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது.
விஜய் சங்கர் 150 ரன்கள் குவிப்பு:
இதில் நாராயணன் ஜெகதீசன் 89 ரன்களும், ஆண்டிரூ சித்தார்த் 36 ரன்களும் எடுக்க மற்றவர்கள் தடுமாறினர். எனினும் சிஎஸ்கே வீரர் விஜய் சங்கர் அபாரமாக விளையாடி 171 பந்துகளை எதிர் கொண்டு 150 ரன்கள் விளாசினார். இதில் 12 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும்.
இதன்மூலம் தமிழ்நாடு அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 403 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய சண்டீகர் அணியில் கேப்டன் மணன் வொஹ்ரா தொடக்க வீரராக களம் இறங்கி சதம் விளாசினார். எனினும் அவருக்கு மற்ற வீரர்கள் யாரும் கம்பெனி தரவில்லை. இரண்டாவது அதிகபட்சமாக அன்கிட் கவுசிக் 37 ரன்களும் சிவம் பாம்புரி 16 ரன்களும் எடுக்க மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இதனால் 50 ஓவர் மட்டுமே எதிர்கொண்ட சண்டீகர் 193 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தமிழக பந்துவீச்சு தரப்பில் அஜித் ராம், சாய் கிஷோர் ஆகியோர் இரண்டாவது இன்னிங்சில் தலா நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் தமிழக அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி பிரிவில் தமிழக அணி 25 புள்ளிகள் முதல் இடத்தில் இருக்கிறது.