ரஞ்சி காலிறுதி.. சாய் கிஷோர் கலக்கல் பவுலிங்.. புஜாரா ஏமாற்றம்.. கோவையில் தமிழக அணி அசத்தல்

0
2840
Kishore

இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சி டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் காலிறுதி போட்டிகள் ஆரம்பித்திருக்கின்றன.

தமிழக அணி ரஞ்சி தொடரில் ஆறு வருடங்களுக்கு பிறகு காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கிறது. இந்தச் சுற்றில் பலம் வாய்ந்த சௌராஷ்டிரா அணிக்கு எதிராக விளையாடுகிறது. சௌராஷ்டிரா அணியில் புஜாரா விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் கோவையில் நடைபெறும் இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற சௌராஷ்டிரா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால் தமிழக அணியின் கேப்டன் சாய் கிஷோர் மற்றும் அஜித் ராம் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சில், சௌராஷ்டிரா சுருண்டது.

சௌராஷ்ட்ரா அணியின் துவக்க ஆட்டக்காரர் ஹர்விக் தேசாய் மட்டும் தாக்குப்பிடித்து 85 ரன்கள் எடுத்தார். அடுத்து பிரேராக் மன்காட் 35, அர்பித் வஸ்தவா 25, செல்டன் ஜாக்சன் 22 என சொற்ப ரன்கள் மட்டுமே எடுத்தார்கள்.

நடப்பு ரஞ்சி தொடரில் பேட்டிங்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிற புஜாரா மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இன்று இரண்டு ரன்கள் மட்டுமே எடுத்து அஜித் ராம் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார்.

- Advertisement -

சௌராஷ்டிரா அணி 77.1 ஓவர்களில் 183 ரன்கள் மட்டும் எடுத்து சுருண்டது. தமிழக அணியின் கேப்டன் சாய் கிஷோர் ஐந்து விக்கெட்டுகள், அஜித் ராம் மூன்று விக்கெட்டுகள், சந்தீப் வாரியர் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

தொடர்ந்து விளையாடிய தமிழக அணி விமல் குமார் விக்கெட்டை ஐந்து ரன்களில் இழந்து, முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 23 ரன்கள் எடுத்திருக்கிறது. நாராயணன் ஜெகதீசன் 12, சாய் கிஷோர் 6 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்கள்.

நாளை தொடர்ந்து நடைபெறும் ஆட்டத்தில் குறைந்தது 150 ரன்கள் லீடிங் பெற்று, சௌராஷ்டிரா அணிய இரண்டாவது இன்னிங்ஸில் விளையாட விட்டால், அரை இறுதிக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். பலமான சௌராஷ்டிரா அணி இரண்டாவது இன்னிங்ஸில் கடுமையாக போராடும் என்பது குறிப்பிடத்தக்கது.