இந்தியாவின் மிக முக்கியமான உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ரஞ்சி டிராபி நேற்று முதல் துவங்கி நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
இதில் மொத்தம் 38 அணிகள் பங்கு பெறுகின்றன. எலைட் பிரிவில் 16 போட்டிகளும், பிளேட் பிரிவில் மூன்று போட்டிகளும் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
1931 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரில் அதிக முறை கோப்பையை வென்ற அணியாக மும்பை அணி இருந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று மும்பை மற்றும் பீகார் அணிகள் மோதிக் கொள்ளும் ரஞ்சி டிராபி போட்டியில் வினோதமான சம்பவங்கள் நடைபெற்ற காரணத்தினால், போட்டி ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது.
சாம்ஸ் முலானி தலைமையிலான மும்பை அணியை எதிர்கொண்டு விளையாட இரண்டு பீகார் அணிகள் வந்தது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
பீகார் கிரிக்கெட் சங்கத்தில் இரண்டு பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்டு வந்த மோதலின் காரணமாக, இரண்டு அணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இந்த குழப்பத்திற்கு காரணம் என்று தெரிய வருகிறது.
ஒரு பீகார் அணியை பீகார் கிரிக்கெட் சங்க தலைவர் ராகேஷ் திவாரி தேர்ந்தெடுத்திருக்கிறார். மற்றொரு அணி பீகார் கிரிக்கெட் சங்க செயலாளர் அமித் குமாரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இறுதியாக சங்கத் தலைவர் ராகேஷ் திவாரி தேர்ந்தெடுத்த அணி நேற்று மும்பை அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
தற்பொழுது பீகார் கிரிக்கெட் சங்கத்தின் மீது இந்திய கிரிக்கெட் வாரியம் அதிரடியாக ஏதாவது நடவடிக்கைகள் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து இன்னும் சில நாட்களில் தெரியவரும் !