ஐபிஎல் 2025 கிரிக்கட் லீக் தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் பஞ்சாப் அணியின் துவக்க ஆட்டக்காரர் பிரியன்ஸ் ஆர்யா அபாரமாக விளையாடி சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.
சிஎஸ்கே பஞ்சாப் கிங்ஸ் மோதல்
ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 22-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் தற்போது விளையாடி வருகின்றன. முல்லான்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் தங்கள் அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். கடந்த மூன்று போட்டிகளிலும் தொடர்ச்சியான தோல்வி அடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இப்போட்டி மிக முக்கியமாக அமைந்துள்ளது.
இருப்பினும் கடந்த போட்டியில் விளையாடிய வீரர்களே சென்னை அணியில் இந்த போட்டியிலும் களமிறங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் பஞ்சாப் அணியின் இன்னிங்ஸை இளம் வீரர்களான பிரியன்ஸ் ஆர்யா மற்றும் பிரபப் சிம்ரன் சிங் ஆகியோர் தொடங்கினார்கள். இதில் விக்கெட் கீப்பர் பிரப் சிம்ரன்சிங் தனது 2வது பந்தில் முகேஷ் சௌத்ரி பந்துவீச்சில் போல்ட் ஆகி வெளியேறினார். பிரியன்ஸ் ஆர்யா ஒரு முனையில் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார்.
பிரியான்ஸ் ஆர்யா சாதனை சதம்
பஞ்சாப் அணிக்கு கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 9 ரன், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் 4 ரன், நெகல் வதேரா 9 ரன், மற்றும் மேக்ஸ்வெல் 1 ரன் என முன்னணி வீரர்கள் அனைவரும் வரிசையாக நடையை கட்டிக் கொண்டிருக்க, மறுமுனையில் ஆர்யா எந்தவித பயமும் இல்லாமல் தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். 19 பந்துகளில் தனது அரை சதத்தை அடித்த நிலையில் சதத்தை நோக்கி மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தார். ஆட்டத்தின் 13 வது ஓவரை சிஎஸ்கே அணியின் முக்கிய பவுலர் பத்திராணா வீசினார்.
இதையும் படிங்க:472 ரன்.. ஈடன் கார்டனில் ரன் மழை.. பூரான் சூறாவளி ஆட்டம்.. போராடிய கேகேஆர்.. வெறும் 4 ரன்னில் திரில் வெற்றி பெற்ற லக்னோ
அந்த ஓவரின் முதல் பந்தைத் தவிர அடுத்த மூன்று பந்துகளில் தொடர்ச்சியாக சிக்சர்கள் விளாசி 98 ரன்கள் இருந்த நிலையில், 5வது பந்தில் பவுண்டரி அடித்து 39 பந்துகளில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ஐபிஎல் தொடரில் அதிவேக சதத்தை பதிவு செய்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 37 பந்துகளில் யூசுப் பதான் தனது சதத்தை அடித்த நிலையில் தற்போது சிஎஸ்கே அணிக்கு எதிராக பிரியன்ஸ் ஆர்யா குறைந்த பந்துகளில் தனது சதத்தை பதிவு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 42 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸ் என 103 ரன்கள் குவித்த நிலையில் கடைசியாக நூர் அகமதுவின் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.






