நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டி முடிந்ததிலிருந்து இன்று வரையில் தான் நான்கு மணி நேரம் மட்டும் தூங்கி இருப்பதாகவும், போட்டிக்கான திட்டங்களை எப்படி தயாரிக்கிறேன் என்பது குறித்தும் ஸ்ரேயாஸ் ஐயர் பேசியிருக்கிறார்.
நடப்பு 18 ஆவது ஐபிஎல் சீசனில் இறுதிப்போட்டி நாளை குஜராத் அகமதாபாத் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதுவரையில் ஐபிஎல் கோப்பையை வெல்லாத ஆர்சிபி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நாளை மோதிக்கொள்ள இருக்கின்றன.
ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயரை அதற்கடுத்து டெல்லி அணி நிர்வாகம் கேப்டனாக தொடரவில்லை. இதைத்தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக அவர் கோப்பையை வென்ற பொழுதும் அந்த அணி நிர்வாகம் அவரை தக்க வைக்கவில்லை.
மேலும் பிசிசிஐ சம்பள பட்டியலில் இருந்து நீக்கியது. இப்படியான நிலையில் மும்பை மாநில அணிக்கு கேப்டனாக இருந்து கோப்பைகளை வென்றது, ஐபிஎல் கோப்பையை கேப்டனாக இருந்து வென்றது, தற்போது கேப்டனாக மட்டுமில்லாமல் பேட்ஸ்மேன் ஆகவும் அணியை ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்திருப்பது என, ஸ்ரேயாஸ் ஐயரின் எழுச்சி மிகப்பெரிய அளவில் அமைந்திருக்கிறது.
இதுகுறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பேசும் பொழுது “நான் ஒரு ஜோனில் இருக்கிறேன் என்று சொல்லும் பொழுது, அது போட்டிக்கு முன்நாளில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது. அதாவது வார்ம் அப், நீங்கள் உங்களை எவ்வாறு திட்டமிடுகிறீர்கள்? எவ்வாறு போட்டியை அணுக இருக்கிறீர்கள் என்று ஆரம்பிக்கிறது. நான் முழுமையாக தயாரான பிறகு நான் அணி வீரர்களை ஒன்றாக எப்படி திரட்ட போகிறேன் என்று தெரியும்”
“நேற்று சிவப்பு மண் ஆடுகளத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் நாங்கள் அவர்களை 203 ரன்னுக்கு கட்டுப்படுத்தியது மிகவும் சிறப்பான முயற்சி. அப்படிப்பட்ட ஆடுகளத்தில் நான் எப்படி விளையாட வேண்டும் என்பது குறித்த திட்டம் என்னிடம் இருந்தது. எங்கள் தொடக்க வீரர்கள் நல்ல ரன் ரேட்டை கொண்டு வந்திருந்தார்கள். இதனால் என்னை செட்டில் செய்து கொண்டேன். இதற்கு அடுத்து நான் என் உள்ளுணர்வை ஆதரிப்பதில் எல்லாம் நடந்தது. நேற்று நாங்கள் வென்றோம் ஆனால் திருப்தி அடையவில்லை”
இதையும் படிங்க : விராட் கோலிக்காக நாளைக்கு பஞ்சாப்ப சம்பவம் செய்வோம்.. இந்த 2 காரணம் போதும் – ரஜத் பட்டிதார் பேச்சு
“எனக்கு தூங்குவதற்கு நேரமே கிடைக்கவில்லை. நேற்று போட்டியில் நள்ளிரவுக்கு மேல் முடிந்தது. அங்கிருந்து நான் தூங்குவதற்கு நான்கு மணி நேரம் மட்டுமே எனக்கு கிடைத்தது. இதற்கு அடுத்து பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு நான் இப்பொழுது வந்து விட்டேன். இதற்கு அடுத்து நான் சென்று மறுபடியும் போட்டிக்கான வேலைகளை பார்க்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.