பரபரப்பான ஆட்டத்தில் மழையோடு சேர்த்து கொல்கத்தாவை வீழ்த்தியது பஞ்சாப்!

0
116
Ipl2023

பதினாறாவது ஐபிஎல் சீசனில் இரண்டாவது போட்டி இன்று பஞ்சாப் மொகாலி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது!

இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு புதிதாக கேப்டனாக பொறுப்பேற்றுள்ள நிதிஷ் ரானா டாசை வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். புதிதாக தலைமை தாங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியில் இங்கிலாந்தைச் சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் லிவிங்ஸ்டன் காயம் காரணமாக இன்று விளையாடவில்லை. மேலும் தென்னாபிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா சொந்த நாட்டு அணிக்காக விளையாடி வருவதால் இன்னும் வந்து சேரவில்லை.

- Advertisement -

பஞ்சாப் அணிக்காக கேப்டன் ஷிகர் தவான் உடன் சேர்ந்து பிரப்சிம்ரன் துவக்க வீரராக களம் இறங்கி முதல் இரண்டு ஓவர்களை விளையாடி 12 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் இரண்டு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடக்கம்.

இதற்கு அடுத்து கேப்டன் ஷிகர் தவானுடன் ஜோடி சேர்ந்த இலங்கையைச் சேர்ந்த பானுக ராஜபக்சே அதிரடியில் மிரட்ட ஆரம்பித்தார். 30 பந்துகளில் அரை சதம் அடித்த அவர் அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். இதில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் அடக்கம். இந்த ஜோடி இரண்டாவது விக்கட்டுக்கு 83 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்தது. மேலும் முதல் 10 ஓவர்களில் நூறு ரண்களை பஞ்சாப் அடித்திருந்தது.

இதற்கு அடுத்து பஞ்சாப் அணியின் ரன் வேகம் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது. 200 ரன்களை உறுதியாக எட்டும் நிலையில் இருந்து, இறுதியாக 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 191 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷிகர் தவான் 29 பந்துகளில் 40 ரன்கள், ஜிதேஷ் ஷர்மா 11 பந்துகளில் 21 ரன்கள், சிக்கந்தர் ராஸா 13 பந்துகளில் 16 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச விலைக்கு வாங்கப்பட்ட ஷாம் கரன் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 17 பந்துகளில் 26 ரன்கள், தமிழகத்தைச் சேர்ந்த ஷாருக்கான் ஏழு பந்துகளில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 11 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்கள். கொல்கத்தா தரப்பில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் நான்கு ஓவர்கள் பந்து வீசி 26 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கட்டையும் கைப்பற்றி அசத்தினார்.

இதற்கு அடுத்து கொஞ்சம் பெரிய இலக்கை நோக்கி களம் இறங்கிய கொல்கத்தா அணிக்கு ஆட்டத்தில் இரண்டாவது ஓவரை தனது முதல் ஓவராக வீசிய அர்ஸ்தீப் சிங், மந்திப் சிங், அனுக்குல் ராய் என இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.

இதற்கு அடுத்து வருண் சக்கரவர்த்திக்கு மாற்றாக இம்பேக்ட் பிளேயர் ஆக தமிழகத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் களமிறங்கினார். கேப்டன் நிதிஷ் ராணா 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த ரிங்கு சிங் நான்கு ரன்களில் வெளியேறினார்.

இதற்கடுத்து வெங்கடேஷ் உடன் ஆண்ட்ரே ரசல் ஜோடி சேர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த கொல்கத்தா அணிக்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது. ஷாம் கரன் வீசிய ஓவரில் சிக்ஸர் மற்றும் பவுண்டரி பறக்க விட்ட ரசல் மற்றும் ஒரு பந்தை தூக்கி அடிக்க அது சிக்கந்தர் ராசா கையில் கேட்ச் ஆனது. ஆண்ட்ரே ரசல் 19 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதற்கு அடுத்து அர்ஸ்தீப் சிங் ஓவரில் வெங்கடேஷ் 28 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

16 ஓவர்களில் கொல்கத்தா அணி ஏழு விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதை அடுத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் ஆட்டத்தை நடத்த முடியாத காரணத்தால் டாக் வொர்த் விதிப்படி ஏழு ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பஞ்சாப் அணி தனது முதல் ஆட்டத்தில் வெற்றியை ஈட்டி கொண்டுள்ளது. பஞ்சாப் அணிக்காக அர்ஸ்தீப் சிங் மூன்று ஓவர்கள் பந்து வீசி 19 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.